தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆந்திராவில் ‘இந்தியாவின் ஆகப்பெரிய முதலீட்டில்’ இரும்பு ஆலை

1 mins read
fe5b29be-b860-47f0-890a-a31f9d03ca44
ஆந்திரப் பிரதேசம், அனகப்பள்ளி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த இரும்பு ஆலை அமைக்க ஜப்பானின் நிப்பான் ஸ்டீல் நிறுவனம் கிட்டத்தட்ட ரூ.1.4 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

ஆந்திரப் பிரதேசம், அனகப்பள்ளி மாவட்டத்தில் உள்ள நக்கப்பள்ளியில் ஆண்டுக்கு 24 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தித்திறன் கொண்ட இரும்பு உற்பத்தி ஆலை கிட்டத்தட்ட ரூ.1.4 லட்சம் கோடி முதலீட்டில் நிறுவப்பட உள்ளது.

ஆர்சிலர் மிட்டல் (ArcelorMittal), ஜப்பானின் நிப்பான் ஸ்டீல் (Nippon Steel) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக அமைக்கவுள்ள இந்த ஆலை, கிட்டத்தட்ட 70,000 நேரடி, மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் மாநில அமைச்சரவை கூட்டத்தில், ஆலை குறித்த விரிவான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தெலுங்கு தேசக் கட்சி தனது எக்ஸ் தளத்தில் இந்தத் திட்டத்தை “இந்தியாவின் ஆகப்பெரிய முதலீடு” என்று கூறியுள்ளது.

இரும்பு ஆலையுடன் கூடுதலாக, மொத்தம் 17 துறைமுகங்களுக்கான திட்டமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக ரூ. 11,198 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் மொத்தம் 8,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

புதிய ஆலைக்கு 4,500 ஏக்கர் நிலம் தேவைப்படும் நிலையில், நக்கப்பள்ளி, பல்க் மருந்து பூங்காவிற்கு அருகில் உள்ள 1,800 ஏக்கர் நிலத்தை உடனடியாக வழங்க மாநில அரசு முன்வந்துள்ளது. ஆலையின் முதல் கட்ட பணிகள் ஜனவரி 2029ஆம் ஆண்டும், இரண்டாம் கட்ட பணிகள் 2033ஆம் ஆண்டும் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்