கேரளத் தேர்தலை வெளிச்சமாக்கிய ‘இருண்ட காலம்’

கேரளத் தேர்தலை வெளிச்சமாக்கிய ‘இருண்ட காலம்’

2 mins read
4e2f9f15-6956-44c0-ae40-c803e1b73657
கேரளாவில் உள்ள 140 தொகுதிகளிலும் நாளை (ஏப்ரல் 9) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. - படம்: செயற்கை நுண்ணறிவு

கேரளாவில் நாளை (ஏப்ரல் 9) சட்டமன்றத் தேர்தல். 140 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக வாக்களிப்பு நடைபெறுகிறது. அண்மைய வாரங்களாக அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்வுபெற்றது. இருந்தாலும், சமூக ஊடகங்கள் வாயிலாக நிழற்பிரசாரம் நீடித்தது.

குறிப்பாக, இந்த முறை வலையொலி (Podcast) முக்கியப் பிரசார ஆயுதமாக உருவெடுத்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் முதல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் வரை பல முக்கியத் தலைவர்கள் அந்தப் புதிய வடிவிலான நேர்காணலில் பங்கேற்றனர். அவை இந்தத் தேர்தலில் லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து கவனத்தை ஈர்த்துள்ளன.

இன்ஸ்டகிராம் ரீல்ஸ் வழியான பிரசாரம் இம்முறை அதிக பிரபலமடைந்துள்ளது. முன்னணிக் கட்சிகளும் ரீல்ஸ் வாயிலாகப் பிரசார விளம்பரங்களை வெளியிட்டன. அதற்காகும் செலவு மிகவும் குறைவு. அதனால், பிரசாரப் போர்க்களங்களாக மின்னிலக்கத்தளங்கள் உருவெடுத்துள்ளன.

16 முதல் 26 வயது வரையிலான இளையர்களை இலக்காக வைத்து மின்னிலக்கப் பிரசாரம் செய்யப்படுகிறது. அவர்களில் முதன்முறை வாக்களிப்போரிடையே இன்ஸ்டகிராம் ஈடுபாடு அதிகமாக உள்ளது. அத்தகைய இளையர்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கக்கூடிய சக்தியாக உருவெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படும் அளவுக்கு எண்ணிலடங்கா மின்னிலக்கப் பிரசாரம் இடம்பெற்றது. தொகுதி தொகுதியாக வேட்பாளர்கள் சென்று வாக்கு சேகரிப்பதைக் காட்டிலும் இன்ஸ்டா ரீல்ஸ் பிரசாரம் அதிக மக்களைக் கவர்ந்து வருகிறது.

தேர்தல் வாக்குறுதிகளை உள்ளடக்கிய ‘இந்திரா கியாரண்டி’ என்னும் காங்கிரஸ் பிரசாரக் காணொளி ஏராளமானோரைச் சென்றடைந்துள்ளதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

அதற்குப் போட்டியாக ‘இருண்ட காலம்’ என்னும் காணொளியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெளியிட்டது. பத்து ஆண்டு கால கம்யூனிச ஆட்சிக்கு முன்னர் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது கேரள மாநிலம் இருண்டு கிடந்ததை அந்தக் காணொளி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

பாஜகவும் தன் பங்குக்கு ‘நன்னியுண்டே’ (நன்றி), மற்றும் ‘மதியாயி’ (போதும்) ஆகிய தலைப்புகளில் காணொளிப் பிரசாரத்தை சமூக ஊடகங்களில் பரப்பியது.

‘ஜென்-இசட்’ எனப்படும் இளம் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கவே மூன்று முக்கியக் கட்சிகளும் மின்னிலக்கப் பிரசாரத்தில் அதிகக் கவனம் செலுத்தின.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 30 தொகுதிகளில் பாஜகவின் கை ஓங்கி இருப்பது அக்கட்சியின் முன்னேற்றத்தைக் காட்டுகிறது. பத்தாண்டுக்கு முன், 2016 தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் வென்று கணக்கைத் தொடங்கிய பாஜக, 2021 தேர்தலில் அந்த ஒன்றையும் இழந்து பூஜ்ஜியத்தைப் பெற்றது.

திருச்சூர் மக்களவைத் தொகுதி வெற்றி, உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான வாக்குகள் என ஏறுமுகமாக மாறிவரும் பாஜக முகம் இத்தேர்தலில் வெற்றிமுகமாக மாறக்கூடும். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி மீதான எதிர்ப்பு அலையும் எதிர்த்தரப்பு காங்கிரஸ் கட்சியில் நிலவும் உட்கட்சிப் பூசலும் பாஜகவின் வெற்றியைச் சுலபமாக்கக்கூடும். வாக்குகள் சிதறி, கேரளாவில் தொங்கு சட்டமன்றம் ஏற்படும் வாய்ப்பையும் மறுப்பதற்கில்லை. -திருநா.

குறிப்புச் சொற்கள்