தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எல்லை தாண்டிய பயங்கரவாதம்: கடத்த முயற்சியை முறியடித்த பஞ்சாப்

2 mins read
12b6ed1b-1e5c-4264-8cec-fec2c789b8c3
‘ஐஎஸ்ஐ’யுடன் முக்கியத் தொடர்புடைய சதிகாரர்களின் வலையமைப்பை ஆரம்பக் கடத்த்திலேயே கண்டுபிடித்த பஞ்சாப் காவல்துறை, ‘ஏகே-308’ ரக துப்பாக்கி உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள், போதைப்பொருள், ₹7.50 லட்சம் ரொக்கம், கார், மூன்று கைபேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளது.  - படம்: இந்திய ஊடகம்

 புதுடெல்லி: எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கையாக அரங்கேறவிருந்த கடத்தல் சம்பவத்தை விரைவாகச் செயல்பட்டு, முறியடித்துள்ளது பஞ்சாப் காவல்துறை.

மத்திய அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு பாகிஸ்தான், மற்றும் ‘ஐஎஸ்ஐ‘ ஆதரவுபெற்ற கடத்தல்காரர்களின் சதித்திட்டத்தை  தகுந்த நேரத்தில் கண்டுபிடித்த காவல்துறை, இதன் தொடர்பில் ஐவரைக் கைது செய்துள்ளது.

இந்தத் தகவலைப் பஞ்சாப் காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி)  கவுரவ் யாதவ் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர்கள் ஜோபன் என்ற ஜோபஞ்சித் சிங், கோரா சிங், ஷென்ஷான் என்கிற ஷாலு, சன்னி சிங், மோட்டு என்கிற ஜஸ்ப்ரீத் சிங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர்களில் முதல் இருவர் ரங்கர்ஹ் கிராமத்தையும், ஷாலு, சன்னி ஆகியோர் அம்ரிட்ஸரின் ரசுல்பூர் பகுதியையும், மோட்டு ரூப்நகரின் முகல்மங்க்ரி எனும் இடத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஐஎஸ்ஐ‘யுடன் முக்கியத் தொடர்புடைய இந்தச் சதிகாரர்களின் வலையமைப்பை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடித்த பஞ்சாப் காவல்துறை, ‘ஏகே-308’ ரக துப்பாக்கி உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள், போதைப்பொருள்,  ₹7.50 லட்சம் ரொக்கம், கார், மூன்று கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளது. 

இதன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள ஐவருக்கும் பாகிஸ்தானிலிருந்து இயங்கும் ‘ஐஎஸ்ஐ‘ அமைப்புடன் நேரடி தொடர்புள்ளது தெரியவந்துள்ளதாகக் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) அன்று வெளியான காவல்துறை அறிக்கை விவரித்தது.

இதுகுறித்து கருத்துரைத்துள்ள காவல்துறை, ‘‘பயங்கரவாதம், திட்டமிட்டு நடத்தப்படும் குற்றங்களை அயராது ஒடுக்கவும், மாநிலமெங்கிலும் அமைதி, நல்லிணக்கம், பாதுகாப்பு ஆகியவற்றை கட்டிக்காத்திடவும் பஞ்சாப் காவல்துறை உறுதிபூண்டுள்ளது’’ என்றும் தெரிவித்துள்ளது.

விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

குறிப்புச் சொற்கள்