இஸ்ரேல் - ஈரான் போர்ப் பதற்றம்: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

இஸ்ரேல் - ஈரான் போர்ப் பதற்றம்: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

2 mins read
8318f55e-23dc-40ab-b0d8-d98a16394874
இந்தியா தனது தேவைக்கான 90% கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. - படம்: தி ஹன்ஸ் இந்தியா

புதுடெல்லி: இஸ்ரேல், ஈரான் இடையேயான போர்ப் பதற்றம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல், தங்கத்தின் விலை அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே தங்கத்தின் விலை பல புதிய உச்சங்களைத் தொட்டு வரும் நிலையில், மீண்டும் அதன் விலை உயரக்கூடும் என்ற தகவல் சாமானியர்களின் தங்கம் வாங்கும் கனவை தகர்ப்பதாக உள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி, உலகின் முக்கியமான கச்சா எண்ணெய் ஏற்றுமதி வழித்தடமாக அறியப்படுகிறது. ஏறக்குறைய உலக கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 30% இந்த வழித்தடத்தில்தான் நடக்கிறது.

ஈரான் மீது தாக்குதல் நடந்தால் ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடம் காலவரையறை இன்றி மூடப்படும் என்று ஈரான் ஏற்கெனவே எச்சரித்திருந்தது.

இந்த நிலையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய அதிரடித் தாக்குதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஈரான் இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. எனினும், அவ்வழித்தடம் மூடப்பட்டால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியா தனது தேவைக்காக 90% கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது.

எனவே இறக்குமதி பாதிக்கப்பட்டாலோ அதற்கான செலவுகள் அதிகரித்தாலோ, அது இந்தியாவில் பெட்ரோல், டீசல் சில்லறை விலைகளை அதிகரிக்கச் செய்யும்.

இதனிடையே, இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக சென்னையில் தங்கத்தின் விலை விண்ணைத் தொட்டது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.15,500ஐ கடந்து புதிய வரலாறு படைத்தது.

அனைத்துலகச் சந்தையில் நிலவும் பொருளியல் மாற்றங்கள், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ப் பதற்றங்கள் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இந்த அளவிற்கு உயர்ந்துள்ளதாகத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்