டெல் அவிவ்: அமெரிக்காவின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து கவலை தெரிவித்ததோடு, இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு.
இஸ்ரேலில் நடைபெற உள்ள தேர்தலுக்குச் சில நாள்களே உள்ள நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட ஓர் அமெரிக்க நிர்வாகம் ஆட்சிக்கு வரக்கூடும் என்றும் அத்தகைய சூழல் உருவானால், இஸ்ரேலுக்கான ராணுவ உதவியும் உத்திபூர்வ ஆதரவும் பாதிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்தியா, லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் புதிய அரசதந்திர உறவுகளை வளர்த்துக்கொள்வது இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு மிக அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், நெட்டன்யாகுவின் மறுதேர்தல் பிரசாரத்திற்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த சில மணி நேரங்களிலேயே இந்தக் கருத்து வெளியானது கவனிக்கத்தக்கது.
அமெரிக்காவில் சாதகமான சூழல் இருக்கும் வரை அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதோடு, சாத்தியமான அரசியல் மாற்றங்களை எதிர்கொள்ளவும் இஸ்ரேல் தயாராக இருக்க வேண்டும் என்றும் இந்தியா போன்ற பெரிய நாடுகளுடன் கூட்டாண்மையை விரிவாக்குவது இஸ்ரேலின் அனைத்துலக நிலையை வலுப்படுத்தும் என்றும் திரு நெட்டன்யாகு கூறியுள்ளார்.
முன்னதாக, இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே உள்ள தனித்துவமான உறவைச் சுட்டிக்காட்டிய அவர், பிரதமர் நரேந்திர மோடியுடனான நட்பையும் நினைவுகூர்ந்தார்.
உலகளவில் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுவதாக எழும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாகவே, இந்தியாவுடனான இந்த நட்புறவை அவர் மீண்டும் முன்வைக்கிறார் என அனைத்துலக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சித் தலைவர்களான பராக் ஒபாமா, ஜோ பைடன் ஆகியோரின் பதவிக் காலத்தில், நெட்டன்யாகுவின் சில முடிவுகள் அமெரிக்காவுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தியதாக விமர்சனங்கள் உள்ளன.
