கர்நாடகாவில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இஸ்‌ரேலியச் சுற்றுப்பயணி

2 mins read
01b57a32-c87d-4a9b-ac09-98ae19524b36
விசாரணை மேற்கொள்ள ஆறு சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். - படம்: இந்திய ஊடகம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஹம்பி மாவட்டத்தில உள்ள சனாப்பூர் ஏரிக்கரையில் 27 வயது இஸ்‌ரேலியச் சுற்றுப்பயணி ஒருவரும் 29 வயது தங்கும் விடுதி உரிமையாளரும் மூன்று ஆடவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினர்.

இச்சம்பவம் மார்ச் 6ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு 11.30 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இரு பெண்களும் விண்மீன்களைப் பார்ப்பதற்காக அங்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இரு பெண்களுடனும் இருந்த மூன்று ஆண்கள் அந்தக் கும்பலால் தாக்கப்பட்டதுடன் ஏரிக்குள் தள்ளப்பட்டதாக அறியப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த டேனியல், மகாராஷ்டிராவைச் சேர்ந்த பங்கஜ் பாதுகாப்பான இடத்திற்கு நீந்திச் சென்றுவிட்டபோதும் ஒடிசாவைச் சேர்ந்த பிபாஷ் நீரில் மூழ்கி இறந்துவிட்டார். அவரது உடல் இரண்டு நாள்கள் கழித்து கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரவு உணவுக்குப்பின் நான்கு விருந்தினருடன் நட்சத்திரங்களைக் காணக் கரையில் இருந்ததாகத் தங்கும் விடுதி உரிமையாளர் தமது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

மோட்டார்சைக்கிளில் வந்த மூன்று ஆடவர்கள், பெட்ரோல் எங்கே கிடைக்கும் என்று இவர்களிடம் கேட்டனர். அருகில் பெட்ரோல் நிரப்பும் இடம் ஏதுமில்லை என்று தங்கும் விடுதி உரிமையாளர் பதிலளிக்கவே, அந்த ஆடவர்கள் தங்களுக்கு 100 ரூபாய் வேண்டும் என்று மிரட்டினர்.

முடியாது என்று பயணிகள் கூறியதை அடுத்து சண்டை மூண்டது. தாக்குதல் மேற்கொண்ட அந்தக் கும்பல் பின்னர் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டனர்.

இந்தச் சம்பவத்தின் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள ஆறு சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர், குற்றம் இழைத்தவர்களைப் பிடிக்கும் முயற்சியைத் தீவிரப்படுத்தி உள்ளதாகச் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்