இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்பு

இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்பு

படம்: மனோரமா நியூஸ்

10 Oct 2026 - 10:10 pm

1 mins read

டெல் அவிவ்: துபாயிலிருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற பயணிகள் விமானத்தில் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்து, 172 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய முதன்மை விமானி ஸ்மித் மச்சாருக்கு, வீர தீரச் செயலுக்கான உயரிய விருதை அறிவித்துள்ளது இஸ்ரேல் அரசு.

கடந்த மாதம் 30ஆம் தேதி ‘ஃப்ளை துபாய்’ நிறுவனத்தின் பயணிகள் விமானம் டெல் அவிவ் நகரை நெருங்கியபோது, ஓமானைச் சேர்ந்த துணை விமானி ஹமாம் அல் ஹமாமி திடீரென ஆபத்தான நடவடிக்கையில் ஈடுபட்டார்.

அவசரகால கோடாரியால் முதன்மை விமானி ஸ்மித் மச்சாரைத் தாக்கிவிட்டு, விமானத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தரையில் மோதச் செய்ய அவர் திட்டமிட்டிருந்தார்.

கடுமையாகக் காயமடைந்த நிலையிலும், மனவுறுதியுடன் போராடிய ஸ்மித் மச்சார், பிற பயணிகளின் உதவியோடு விமானத் தாக்குதலை முறியடித்துப் பாதுகாப்பாகத் தரையிறக்கினார். இதனால் விமானத்திலிருந்த பயணிகள், ஊழியர்கள் அனைவரும் உயிர் தப்பினர்.

தற்போது பலத்த காயங்களுடன் ஐக்கிய அரபு அமீரக மருத்துவமனையில் ஸ்மித் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் ஜெருசலேமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் பேசுகையில், “இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் இந்த அசாதாரண வீரத்தை கௌரவிக்கும் வகையில் இஸ்ரேலின் உயரிய விருது அவருக்கு வழங்கப்படும்” என அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

மேலும், ஸ்மித் மச்சார் விரைவில் பூரண குணமடைந்து திரும்பியதும், இஸ்ரேல் மக்கள் சார்பாக இந்த விருது நேரடியாக வழங்கிச் சிறப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
விமானிவிருதுஇஸ்‌ரேல்பயணிகள்துபாய்