இந்தியக் கிராமங்களை வரைபடமாக்கும் பெரும்பணியை முடித்த இஸ்ரோ

இந்தியக் கிராமங்களை வரைபடமாக்கும் பெரும்பணியை முடித்த இஸ்ரோ

2 mins read
468aeb5a-01fb-400c-beeb-58197c5de5e4
2026ஆம் ஆண்டு தேசிய ஊராட்சி நாளை முன்னிட்டு, இஸ்ரோ உயர்தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி இந்தியாவின் நிலப் பயன்பாடு மற்றும் நிலப்பரப்பு வரைபடத்தை உருவாக்கியுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியாவில் உள்ள அனைத்துக் கிராமங்களையும் விண்வெளியில் இருந்து வரைபடமாக்கும் பெரும்பணியை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செய்து முடித்துள்ளது.

உயர்தெளிவுத்திறன் கொண்ட நிலப் பயன்பாடு மற்றும் நிலப்பரப்பு வரைபடத்தை நிறைவு செய்துள்ளதாக அம்மையம் அறிவித்துள்ளது. தேசிய ஊராட்சி நாளான கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 24) இந்த அறிவிப்பு வெளியானது.

நாடு முழுவதும் உள்ள நிலப்பரப்பை 1:10,000 என்ற விகிதத்தில் உயர்தெளிவுத்திறனுடன் இந்த வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது.

வரைபடத்தில் ஒரு சென்டிமீட்டர் என்பது தரையில் நூறு மீட்டரைக் குறிக்கும். இது ஓர் நெல் வயலையும் குளத்தையும் ஒரு பள்ளியையும் மணல் குவாரியையும் தெளிவாக வேறுபடுத்திக் காட்டும் அளவுக்குத் துல்லியமானது.

கடந்த 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவில் 649,481 கிராமங்கள் இருந்தன. இது தொடர்பான செயற்கைக்கோள் தரவுகளைப் பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு இஸ்ரோ வழங்கியுள்ளது.

“ஊராட்சி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்தத் தரவுகள் பேரளவு உதவுகின்றன. மேலும், கிராம வரைபடமானது இணையத்தளத்தில் உள்ள தகவல் பிரிவுகளில் ஒன்றாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

வலுவான, தரவுகள் சார்ந்த நிர்வாகத்தைக் கிராமப்புற அளவில் சாத்தியமாக்குகிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலப்பரப்பு என்பது பூமியின் மேற்பரப்பில் உள்ள காடுகள், நீர்நிலைகள், புல்வெளிகள் அல்லது கான்கிரீட் கட்டடங்கள் போன்றவற்றைக் குறிக்கிறது.

முன்னர், ஆழ்துளைக் கிணறுகளை எங்குத் தோண்டுவது, எங்குச் சாலை அமைப்பது அல்லது எங்கு மேய்ச்சலுக்கு இடம் ஒதுக்குவது என்பது போன்ற முடிவுகள் பெரும்பாலும் நினைவாற்றல், உள்ளுணர்வின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டன.

இனி, ஊராட்சிகள் செயற்கைக்கோள் வரைபடங்களைப் பயன்படுத்தி ஆழ்துளைக் கிணறுகள், சாலைகள், மேய்ச்சல் நிலங்களைத் துல்லியமாகத் திட்டமிடலாம்.

குறிப்புச் சொற்கள்