ஸ்ரீஹரிகோட்டா: ‘நிசார்’ செயற்கைக்கோள் பாய்ச்சப்படவிருப்பது பூமியை அணுக்கமாகக் கண்காணித்து ஆய்வுசெய்யும் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை புதிய மைல்கல்லாக அமையும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
‘நிசார்’, இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு, அமெரிக்காவின் தேசிய விமானவியல், விண்வெளி நிர்வாக அமைப்பு (நாசா), ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். பூமியைக் கண்காணிக்கும் செயற்கைக்கோளை இவ்விரு அமைப்புகளும் இணைந்து பாய்ச்சுவது இதுவே முதன்முறை.
இந்தச் செயற்கைக்கோள் புதன்கிழமை (ஜூலை 30) இந்திய நேரப்படி மாலை 5.40 மணிக்கு ஆந்திரப் பிரதேச மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா தீவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து பாய்ச்சப்படும்.
நிசாரில் உள்ள ஒரு ரேடார், புதுமையான சுவீப்எஸ்ஏஆர் (SweepSAR) முறையைப் பயன்படுத்துகிறது. அதன் மூலம் மிகவும் தெளிவான படங்களை எடுக்க முடியும் என்று இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
‘நிசார்’, பூமியின் நிலப் பகுதிகளையும் பனி நிறைந்த பகுதிகளையும் படமெடுக்கும். தீவுகள், பனிக்கட்டிகள் உள்ள கடற்பகுதிகள், பெருங்கடல் பகுதிகள் ஆகியவை அவற்றில் அடங்கும். 12 நாள்களுக்கு ஒருமுறை அது படமெடுக்கப்படும்.
நிலம், பனி வடிவங்களில் ஏற்படும் குறைபாடுகள், நில உயிரியல் கட்டமைப்புகள், இரு தரப்பும் அக்கறை கொண்டுள்ள பெருங்கடல் வட்டாரங்கள் ஆகியவற்றை ஆராய்வது ‘நிசார்’ செயற்கைக்கோளின் முக்கிய இலக்காகும். நிலத்தின் வடித்தில் ஏற்படும் மாறுபாடுகளுக்கும் நிலச்சரிவுகள், எரிமலைக் குமுறல் உள்ளிட்டவற்றுக்கும் உள்ள தொடர்புகளையும் அது அடையாளம் காணும்.
இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
“பூமியை ஆய்வுசெய்வது இந்தச் செயற்கைக்கோளின் இலக்கு. இஸ்ரோ, நாசா உருவாக்கத்தில் உலகம் பலனடைகிறது. இது, பூமியை ஆய்வுசெய்யும் தொழில்நுட்பத்தில் முக்கிய மைல்கல்லாகும். பூமியை ஆய்வுசெய்து கண்காணிக்கும் நடவடிக்கை நமக்கு ‘அருகில்’ கொண்டுவரப்படுகிறது, இணைந்திருங்கள்,” என்று இஸ்ரோ எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டுள்ளது.

