இஸ்ரோவின் ‘பாகுபலி’யில் விண்ணில் பாய்ந்தது அமெரிக்காவின் ‘ப்ளூபேர்ட் பிளாக்-2’

3 mins read
7be487cf-14c1-4eb6-b1fa-d9f99b1849b4
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, 6,100 கிலோ எடை கொண்ட அமெரிக்காவின் செயற்கைக்கோளை அனுப்பியது. - படம்: விகடன்

ஸ்ரீஹரிகோட்டா: தகவல் தொடர்புச் சேவைக்காக அமைக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் ‘ப்ளூபேர்ட் பிளாக்-2’ செயற்கைக்கோள், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (டிசம்பர் 24) ஏவப்பட்டது.

அமெரிக்காவின் இந்தச் செயற்கைக்கோள், இஸ்ரோவின் ‘LVM3-M6’ ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, இன்று (டிசம்பர் 24) இந்திய நேரப்படி காலை 8.54 மணிக்கு ‘LVM3-M6’ ராக்கெட் ஏவப்படத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஒரு சில காரணங்களால் 90 விநாடிகள் தாமதத்திற்குப் பின்னர் ராக்கெட் ஏவப்பட்டது.

தரையில் இருந்து புறப்பட்ட ராக்கெட், சுமார் 16 நிமிடங்களில் 520 கி.மீ உயரத்தில் உள்ள புவியின் தாழ்வட்டச் சுற்றுப்பாதையில் ‘ப்ளூ பேர்ட்’ செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.

இதுவரை இஸ்ரோ விண்ணில் ஏவிய செயற்கைக்கோள்களிலேயே மிக அதிக எடை கொண்டது இந்த ‘ப்ளூபேர்ட் பிளாக்-2’ தான். இதன் எடை 6,100 கிலோ என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ‘AST Space Mobile’ நிறுவனம் வடிவமைத்துள்ள ‘ப்ளூபேர்ட் பிளாக்-2’ செயற்கைக்கோள், 4ஜி, 5ஜி இணையச் சேவை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய மதிப்பில் இந்தச் செயற்கைக்கோளின் மதிப்பு சுமார் 560 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாழ்வான புவிச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் மிகப் பெரிய வணிகத் தகவல்தொடர்பு செயற்கைக்கோள் இதுவாகும்.

விண்வெளியில் இருந்து நேரடியாகத் திறன்பேசிகளுக்கு இணைப்பை வழங்குவதன் மூலம், உலகளாவிய தகவல்தொடர்புக் களத்தைப் பெரிதும் மாற்றியமைக்கும் திறனை இந்தச் செயற்கைக்கோள் கொண்டுள்ளது.

காடு, மலை, கடல், கிராமப்புறங்கள், பாலைவனம் போன்ற இடங்களில் செல்போன் கோபுரங்கள் இல்லாவிட்டாலும் இணைய வசதி கிடைக்கச் செய்யும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

‘ப்ளூபேர்ட் பிளாக்-2’ செயற்கைக்கோளைச் சுமந்து சென்ற LVM3-M6 ராக்கெட், இஸ்ரோவின் ஆறாவது LVM வகை ராக்கெட்டாகும். இந்த ராக்கெட் இஸ்ரோவில் செல்லமாக ‘பாகுபலி’ என்று அழைக்கப்படுகிறது.

சுமார் 43.5 மீட்டர் உயரமும், 640 டன் எடையும் கொண்ட இந்த ராக்கெட்டில் திட, திரவ, கிரையோஜெனிக் அடுக்குகள் உள்ளன. சந்திரயான்-2, சந்திரயான்-3 போன்ற விண்கலங்கள் இதே LVM3 ராக்கெட் மூலம்தான் ஏவப்பட்டன.

அமெரிக்காவின் ‘ப்ளூபேர்ட் பிளாக்-2’ செயற்கைக்கோளை அனுப்ப அரும்பாடுபட்ட இஸ்ரோவின் விஞ்ஞானிகள்.
அமெரிக்காவின் ‘ப்ளூபேர்ட் பிளாக்-2’ செயற்கைக்கோளை அனுப்ப அரும்பாடுபட்ட இஸ்ரோவின் விஞ்ஞானிகள். - படம்: விகடன்

LVM3-M6 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது குறித்து இஸ்ரோ தலைவர் டாக்டர் வி.நாராயணன் கூறுகையில், “இந்த ராக்கெட் ஏவப்பட்டது இந்தியாவிற்கு ஒரு புதிய மைல்கல் சாதனையாகும். இந்திய மண்ணிலிருந்து இதுவரை ஏவப்பட்ட மிகப்பெரிய செயற்கைக்கோள் இது.

“இப்பணியின் மூலம், இந்தியா 34 நாடுகளைச் சேர்ந்த 434 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய பெருமையைப் பெற்றுள்ளது. இந்த வெற்றி ககன்யான் திட்டத்தின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்திருக்கிறது,” என்றார்.

இந்த வெற்றிக்குப் பிரதமர் மோடி, “இந்தியாவின் விண்வெளித் துறையில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம். இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்டதிலேயே மிகவும் கனமான செயற்கைக்கோளான, அமெரிக்காவின் ‘ப்ளூபேர்ட் பிளாக்-2’ விண்கலத்தை அதன் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்திய LVM3-M6 ஏவுதல், இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

“இது இந்தியாவின் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் ஏவுதல் திறனை வலுப்படுத்துகிறது. உலகளாவிய ராக்கெட் ஏவுதல் சந்தையில் இந்தியா வளர்ந்து வருவதை இது உறுதிப்படுத்துகிறது. இது தற்சார்பு இந்தியாவை நோக்கிய நமது முயற்சிகளையும் பிரதிபலிக்கிறது. இதற்காகக் கடினமாக உழைத்த விண்வெளி விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் வாழ்த்துகள். விண்வெளி உலகில் இந்தியா தொடர்ந்து மேலும் உயரப் பறக்கிறது,” என்று பாராட்டியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்