ராமர் கோயில் காணிக்கைத் திருட்டு: வழக்கில் உயர்மட்ட தொடர்புள்ளது: கெஜ்ரிவால்

அறக்கட்டளை பொதுச் செயலர், அறங்காவலர் பதவி விலகல்

ராமர் கோயில் காணிக்கைத் திருட்டு: வழக்கில் உயர்மட்ட தொடர்புள்ளது: கெஜ்ரிவால்

கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

26 Jun 2026 - 7:33 pm

2 mins read

https://www.hindutamil.in/news/india/only-low-level-employees-arrested-in-the-ram-temple-donation-theft-case-kejriwal

அயோத்தி:  அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடையில் முறைகேடு நடத்தப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீ ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் பக்தர்கள் வழங்கிய கோடிக்கணக்கான நன்கொடை நிதி, நகைகள் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சிறப்பு விசா​ரணைக் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரப் பிரதேச முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் உத்​தர​விட்​டார். அந்தக் குழு வழங்கிய முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் காவல்துறை எட்டுப் பேரைக் கைது செய்துள்ளது.

முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர் என்று மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் கௌரவ் குரோவர் தெரிவித்தார்.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் கீழ்மட்ட ஊழியர்களே கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்ற அரவிந்த் கெஜ்ரிவால், அங்கு வழிபாடு மேற்கொண்டார்.

அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பது வெறும் கண்துடைப்பு மட்டுமே. இந்த வழக்கில் கீழ்மட்ட ஊழியர்கள் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், இவ்வளவு பெரிய மோசடியை, நீண்ட காலமாக கீழ்மட்ட ஊழியர்கள் மட்டுமே செய்திருக்க முடியாது. இதில், உயர்மட்டத் தொடர்புகள் இருப்பது தெளிவாக தெரிகிறது. கீழ்மட்ட ஊழியர்கள் மீது பழியைச் சுமத்திவிட்டு, செல்வாக்கு மிக்கவர்களைப் பாதுகாக்கும் முயற்சி நடைபெறுகிறது என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
அரவிந்த் கேஜ்ரிவால்ஆம் ஆத்மிஊழியர்கள்