இந்தியாவில் 2030க்குள் தகவல் தொழில்நுட்பச் சேவைகள் மாயமாகிவிடும்: வினோத் கோஷ்லா

இந்தியாவில் 2030க்குள் தகவல் தொழில்நுட்பச் சேவைகள் மாயமாகிவிடும்: வினோத் கோஷ்லா

2 mins read
7dce16af-41c0-4c98-9efb-f63eeab7fb4d
வினோத் கோஷ்லா. - படம்: இந்துஸ்தான் டைம்ஸ்

புதுடெல்லி: இந்தியாவில் எதிர்வரும் 2030க்குள் தகவல் தொழில்நுட்பச் சேவை தொடர்பான வேலைகள் அறவே குறைந்துவிடும் என வினோத் கோஷ்லா தெரிவித்துள்ளார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இந்தப் பணிகளை ஆக்கிரமிக்கும் என்று அவர் கணித்துள்ளார்.

சன் மைக்ரோ சிஸ்டம்ஸ், கோஷ்லா வென்சர்ஸ் ஆகியவற்றின் நிறுவனரான திரு வினோத் கோஷ்லா, இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த பணிகள், வரும் 2030ஆம் ஆண்டு அதன் தற்போதைய வடிவத்தில் இருக்காது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இந்திய மக்கள், தகவல் தொழில்நுட்பச் சேவை என்ற முழு அமைப்பும் மொத்தமாக மாயமாகிவிடும் என்று கூறப்படுவதை நம்பவில்லை எனத் தெளிவாகத் தெரிகிறது.

“எனினும் 2030ஆம் ஆண்டுக்குள் ஐடி சேவைகள், பிபிஓ (BPO) போன்ற எந்தவிதப் பணியும் இருக்காது. அவையெல்லாம் காலம் கடந்த விஷயங்களாகிவிட்டன,” என்று டெல்லி ஏஐ உச்சநிலை மாநாட்டில் பேசியபோது திரு வினோத் கோஷ்லா குறிப்பிட்டார்.

புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது, தற்போதுள்ள பணிகளின் தன்மையை மாற்றிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இந்திய நிறுவனங்கள் உருவாக்கும் புதிய ‘ஏஐ’ சேவைகள் உலகின் பிற நாடுகள் பயன்படுத்தக்கூடிய வகையில் இருக்கும். இந்தியாவில் சிறந்த பொறியாளர்கள் உள்ளனர். சிறந்த திறமைகள், கல்வி ஆகியவை உள்ளன,” என்றார் வினோத் கோஷ்லா.

சுகாதார‌ப் பராமரிப்பில் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரும்‌ மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்றார் அவர்.

அதனால்தான் சுகாதாரத்துறையின் தேவைகளை ஈடுசெய்ய ‘ஏஐ’ மருத்துவர்கள்தான் ஒரே தீர்வு என்று கடந்த 2008ஆம் ஆண்டிலேயே தாம் முடிவுக்கு வந்ததாகக் குறிப்பிட்டார்.

700 மில்லியன் இந்தியர்களுக்கு அன்றாட முதன்மை மருத்துவச் சேவையை வழங்க ஆண்டுதோறும் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலருக்கும் குறைவாகவே செலவாகும் எனச் சுட்டிக்காட்டினார்.

இது தேசிய சுகாதாரச் செலவினத்தில் ஒரு சிறிய பகுதிதான் என்றும் ஏஐ தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது, தொழில்நுட்பத் திறன் என்ற அடிப்படையைவிட அரசியல் அம்சங்களால் வடிவமைக்கப்படும் என்றும் திரு வினோத் கோஷ்லா மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்