புதுடெல்லி: பங்ளாதேஷுடன் நிலவழி வர்த்தக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த இந்தியா எடுத்துள்ள முடிவு, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதற்கான தெளிவான செய்தியை அனுப்புவதாக வெளியுறவு நிபுணர் ரோபிந்தர் சச்தேவ் கூறியுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றத்துக்கு மத்தியில் பங்ளாதேஷில் எழுந்துள்ள நிலவரம் கவலைக்குரியதாக அமைந்துள்ள வேளையில் இந்தியாவின் கடுமையான பதில் நடவடிக்கை வெளிவந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் ஞாயிற்றுக்கிழமை (மே 18) அவர் கூறினார்.
பீகார், ஜார்க்கண்ட், வடகிழக்கு இந்தியா போன்ற பகுதிகளுக்கு உரிமை கோரும் பங்ளாதேஷின் ‘கிரேட்டர் பங்ளா’, ‘சுல்தானேட் பங்ளா’ இயக்கங்களுக்குப் பதிலடி தரும் விதமாக இந்தியாவின் நடவடிக்கை அமைந்துள்ளதாக திரு சச்தேவ் கருத்துரைத்தார்.
“பங்ளாதேஷ் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்க்கும்போது, இந்தியா கடும் நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை எழுந்தது.
“பங்ளாதேஷிலிருந்து நிலவழி வர்த்தகப் பாதைகளை முடக்குவதன்மூலம், பங்ளாதேஷின் செயலை தான் உன்னிப்பாகக் கவனிப்பதை இந்தியா காட்டுகிறது,” என்றார் அவர்.
பங்ளாதேஷின் ஏற்றுமதிகளுக்குக் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக இந்த வர்த்தகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதை திரு சச்தேவ் கோடிட்டுக் காட்டினார். ஒரு விற்பனையாளராக பங்ளாதேஷுக்கு, உலகளாவிய சந்தையில் புதிய வாடிக்கையாளர்களை உறுதிசெய்வதில் சவால்களை எதிர்நோக்கும் என்பதை அவர் சுட்டினார்.
“கோல்கத்தா, மும்பையின் நவ ஷேவா துறைமுகங்களில் மட்டுமே வர்த்தகத்தை அனுமதிப்பதன்மூலம், பங்ளாதேஷிலிருந்து இறக்குமதிகளைக் குறைக்க நாங்கள் முற்படுகிறோம்.
“பொருள் வாங்குபவராக எங்களால் வேறெங்கிருந்தும் வாங்க முடியும். ஆனால், விற்பனையாளராக பங்ளாதேஷுக்கு அதன் பொருள்களை விற்பதில் சிரமம் ஏற்படும்.
தொடர்புடைய செய்திகள்
“எனவே, உறுதியான நிலைப்பாட்டுடன் இருக்கும் இந்தியா, பாகிஸ்தான் உடனான விவகாரத்தைச் சமாளிக்கும் அதேவேளையில் பங்ளாதேஷும் என்ன செய்கிறது என்பதைக் கவனிக்கிறது,” என்று திரு சச்தேவ் விளக்கினார்.