பாட்னா: முதன்முறையாக வாக்களித்த இந்திய இளையர் ஒருவர், அதனை மறக்க முடியாத நிகழ்வாக்கிவிட்டார்.
பீகார் மாநிலம், உஜியார்பூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு திங்கட்கிழமை (மே 13) வாக்குப்பதிவு நடந்தது.
அப்போது, இளையர் ஒருவர் எருமையின்மீது அமர்ந்தபடி வாக்குச்சாவடிக்கு வந்ததைக் கண்டு மற்றவர்கள் வியந்துபோயினர்.
“தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்க இருப்பதை உற்சாகமாக உணர்கிறேன்,” என்றார் அந்த இளையர்.
“இம்முறை யார் வென்றாலும், அவர் எங்கள் சிற்றூரில் வறுமையை ஒழிப்பார், விலைவாசியைக் குறைப்பார், இளையர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவார் என நம்புகிறேன்,” என்றார் அவர்.
அவர் எருமை மீதேறி வந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.
சமஸ்திபூர் மாவட்டத்திலுள்ள உஜியார்பூர் தொகுதியில் மொத்தம் 13 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.