போபால்: சர்ச்சைக்குரிய போஜ்சாலா வளாகம் சரஸ்வதி தேவி கோவிலுக்கு உரியதுதான் என்று மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அம்மாநிலத்தின் தார் மாவட்டத்தில் உள்ளது போஜ்சாலா வளாகம். கடந்த 11ஆம் நூற்றாண்டில் இந்த வளாகம் கட்டப்பட்டதாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இது சரஸ்வதி தேவி கோவிலுக்குச் சொந்தமானது என்பது இந்துக்களின் வாதம். ஆனால் இஸ்லாமியர்களோ, அங்கு கமல் மவுலா மசூதி இருந்ததாக நம்புகின்றனர்.
இதன் காரணமாக சர்ச்சை வெடித்து பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது. இடைக்கால உத்தரவாக கடந்த 2023ஆம் ஆண்டு இருதரப்பினரும் குறிப்பிட்ட நாள்களில் குறிப்பிட்ட நேரத்தில் வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு வெள்ளிக்கிழமை (மே 15) அளித்த தீர்ப்பில், பல்வேறு இலக்கிய, கட்டடக்கலை குறிப்புகள், சர்ச்சைக்குரிய பகுதியில் சரஸ்வதி தேவி கோவில் இருந்ததைச் சுட்டிக்காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
எனவே, லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள சரஸ்வதி தேவி சிலையை மீட்டுக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மசூதி கட்டுவதற்கு வேறு நிலம் ஒதுக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இத்தீர்ப்பையடுத்து, தார் மாவட்டத்தில் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. மக்கள் அமைதி காக்க வேண்டும், வதந்தி அல்லது தவறான தகவல்களை பரப்புவதை தவிர்க்க வேண்டும் என தார் மாவட்ட ஆட்சியர் ராஜீவ் ரஞ்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனிடையே, லண்டனில் உள்ள போஜ்சாலா சரஸ்வதி சிலையை இந்தியா கொண்டுவர உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என மத்தியப் பிரதேச முதல்வர் போஜன் யாதவ் தெரிவித்துள்ளார்.

