திருவனந்தபுரம்: சபரிமலை கோயில் நிர்வாகம் நேரடி முன்பதிவு மூலமாக அன்றாடம் 10,000 பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளது. பம்பை, நிலக்கல், எரிமேலி , பீர்மேடு ஆகிய இடங்களில் பதிவு செய்யலாம்.
சபரிமலையில் நடப்பு ஆண்டுக்கான மண்டல பூஜை டிசம்பர் 26ஆம் தேதி நடக்கிறது. அதையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயில் நவம்பர் 15 ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது. நவ. 16 ஆம் தேதி முதல் பூஜைகள் நடைபெறும்.
சாமி தரிசனம் செய்ய இணைய முன்பதிவு வழங்கப்பட்ட நிலையில், தற்போது நேரடி முன்பதிவு மூலமாகவும் நாள் ஒன்றுக்கு 10,000 பக்தர்களை அனுமதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதனால், இணைய முன்பதிவு 80,000லிருந்து 70,000 ஆகக் குறைக்கப்படுவதாக தேவசம் போர்டு அமைச்சர் வி.என். வாசன் தெரிவித்துள்ளார்.
“கூட்டத்தை சமாளிக்கவும் பாதுகாப்பிற்காகவும் 13,600 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது,” என்றார் அவர்.