நாடாளுமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்குச் சிறை

1 mins read
7dfcda73-5b6c-4bda-87f6-b6de12b201f1
2022ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்திற்கு அதே போன்ற பொட்டலத்தை சம்ரித் அனுப்பியதாகக் கூறப்பட்டது. - படம்: என்டிடிவி

புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததன் தொடர்பில் மத்தியப் பிரதேச மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிஷோர் சம்ரித், 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், மிரட்டல் கடிதத்துடன் சந்தேகத்துக்குரிய பொருளையும் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியதாக டெல்லி நீதிமன்றச் சிறப்பு நீதிபதி விகாஸ் தூல் கூறினார்.

இந்திய அரசமைப்புச் சட்ட நகலுடன் இந்தியக் கொடி, வெடிபொருள் எனச் சந்தேகிக்கப்படும் பொருள் ஆகியவை அடங்கிய பொட்டலத்தை 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி, விரைவு அஞ்சல் மூலம் நாடாளுமன்றத்துக்கு சம்ரித் அனுப்பினார்.

அந்தப் பொட்டலத்தில் அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் 10-பக்கப் புகார்க் கடிதம் இணைக்கப்பட்டிருந்தது. அதில் 70 கோரிக்கைகளை முன்வைத்திருந்த சம்ரிதி, அவற்றை நிறைவேற்றாவிட்டால் 2022 செப்டம்பர் 30ஆம் தேதி நாடாளுமன்றத்தைத் தகர்க்கப் போவதாக மிரட்டியிருந்தார்.

“நாடாளுமன்றத்தை வெடிகுண்டு மூலம் தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுக்கும் கடிதத்துடன் சந்தேகத்துக்குரிய பொருளை அனுப்புதல் என்பது மிகத் தீவிரமாகக் கருதப்படவேண்டிய செயல். அதற்கு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும்,” என்றார் நீதிபதி.

அத்தோடு, இந்தக் குற்றச்செயலைச் செய்தவர் சாதாரணக் குடிமகன் அல்லர்; அவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்பதை அவர் சுட்டினார்.

சம்ரித்துக்கு 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்