புதுடெல்லி: இந்தியாவின் தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அந்நாட்டில் உள்ள குறைந்தது 19 இடங்களில் வியாழக்கிழமையன்று (டிசம்பர் 12) சோதனை நடத்தி வருகிறது.
யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரும் அவற்றில் அடங்கும். பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகம்மதுடன் சம்பந்தப்பட்டுள்ள சிலர் பயங்கரவாதச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டதாகப் பதிவாகியிருக்கும் வழக்கு தொடர்பில் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜம்மு காஷ்மீரில் உள்ள குறைந்தது நான்கு மாவட்டங்களில் சோதனைகள் நடத்தப்படுவதாக உள்ளூர் செய்திகள் தெரிவித்தன. சோதனைகள் குறித்த மேல்விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தேசிய விசாரணை அமைப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.
கடந்த செப்டம்பர் மாதம் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஏழு இடங்களில் தேசிய விசாரணை அமைப்பு சோதனை நடத்தியது. கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதியன்று ரியாசி மாவட்டத்தில் புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள் இருந்த பேருந்துமீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்போது குறைந்தது நான்கு மாநிலங்களில் உள்ள 19 இடங்களிலாவது தேசிய விசாரணை அமைப்பு சோதனை நடத்துவதாக டெக்கன் குரோனிக்கல் போன்ற ஊடகங்கள் தெரிவித்தன. ஜம்மு காஷ்மீரைத் தவிர உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் அவற்றில் அடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை அதிகாலை முதல் சந்தேகப் பேர்வழிகள் ஒளிந்திருக்கக்கூடிய இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பயங்கரவாத சித்தாந்தம் பரப்பப்படுவதற்கு எதிராகவும் தீவிரவாத நடவடிக்கைகளை முறியடிக்கவும் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

