புதுடெல்லி: வர்த்தகம், பொருளியல் நடைமுறைகள் நியாயமானதாகவும் வெளிப்படையாகவும் அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தி உள்ளது.
திங்கட்கிழமை (செப்டம்பர் 8) பிரிக்ஸ் அமைப்பின் உச்சநிலை மாநாட்டில் காணொளி மூலம் உரையாற்றிய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அனைத்துலக வர்த்தக அமைப்பின் அடிப்படைக் கொள்கைகளின்கீழ் உறுதியான, நம்பகமான விநியோகச் சங்கிலிகளை உருவாக்க வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தினார்.
அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கையின் காரணமாகப் பல்வேறு பாதிப்புகளை உலக நாடுகள் எதிர்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகும் வேளையில், உலகம் நிலையான மற்றும் கணிக்கக்கூடிய ஒரு சூழலைத் தேடுவதாக திரு ஜெய்சங்கர் தெரிவித்தார்.
சீன அதிபர் ஸி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புட்டின் உட்பட பல தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இந்தியப் பிரதமர் மோடியின் பிரதிநிதியாக ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிரான ‘பாரபட்சமான தடைகளை’ ரஷ்யாவும் சீனாவும் எதிர்ப்பதாக அதிபர் புட்டின் கருத்து தெரிவித்திருந்த நிலையில் இம்மாநாடு நடைபெற்றது.
இந்தியாவைப் போல் பிரேசிலுக்கும் அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது. இந்நிலையில், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் ஏற்பாட்டில் இம்மாநாடு நடைபெற்றது.
பிரிக்ஸ் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து வாஷிங்டனுக்கு நிறைய சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனவே, இருதரப்பு உறவுகளைச் சமநிலைப்படுத்தும் விதமாக பிரதமர் மோடிக்குப் பதிலாக திரு ஜெய்சங்கர் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
உணவு, எரிசக்தி துறைகளில் உலகளாவிய தெற்குப் பகுதியில் சரிவு ஏற்பட்டிருந்தது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினாலும், திரு ஜெய்சங்கரின் உரையில் வர்த்தகம் தொடர்பான அம்சங்களே முக்கியத்துவம் பெற்றிருந்தன.
தொடர்புடைய செய்திகள்
“பொருளியல் நடவடிக்கைகள் நியாயமானதாகவும் வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும். அனைத்துலக வர்த்தகத்தில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வரும் நிலையில், மிகவும் உறுதியான விநியோகச் சங்கிலியை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். பல்வேறு இடையூறுகள் இருக்கும் நேரத்தில், அத்தகைய அதிர்ச்சிகளுக்கு எதிராக நமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதே நோக்கமாக இருக்க வேண்டும்,” என்றார் ஜெய்சங்கர்.
மீள்தன்மை கொண்ட, நம்பகமான, தேவையற்ற, குறுகிய விநியோகச் சங்கிலிகளை உருவாக்க வேண்டும் என்றும் நிலையான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு உலகிற்கு ஆக்கபூர்வமான மற்றும் கூட்டுறவு அணுகுமுறைகள் தேவை என்றும் ஜெய்சங்கர் தமது உரையில் வலியுறுத்தினார்.
வர்த்தகப் பிரச்சினைகளுடன் வர்த்தகம் அல்லாத பிரச்சினைகளை இணைக்கக் கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார்.
உலக வர்த்தகமானது திறந்த, நியாயமான, வெளிப்படையான, பாகுபாடற்ற, உள்ளடக்கிய, சமத்துவமான விதிகளைச் சார்ந்த அணுகுமுறைகளை அடிப்படையாகத் கொண்டதாக இருக்க வேண்டும் என்று மேலும் வலியுறுத்திய அவர், இதனைப் பாதுகாப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என்றார்.