புதுடெல்லி: லெபனானின் தேசிய தினத்தை முன்னிட்டு அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் யூசுப் ராகி, அரசாங்கம், மற்றும் மக்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜெய்சங்கர், தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் லெபனானுக்கு வாழ்த்துச் செய்தி பதிவிட்டுள்ளார். அதில் அவர், லெபனான் தேசிய நாளையொட்டி வெளியுறவு அமைச்சர் யூசுப் ராகி, அந்நாட்டு அரசாங்கம் மற்றும் மக்களுக்கு வாழ்த்துகள் கூறியதோடு, இந்தியா - லெபனான் உறவை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளும் அரசதந்திரத் தொடர்புகளைத் தீவிரப்படுத்தி வரும் வேளையில் இந்திய வெளியுறவு அமைச்சரின் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கும் லெபனானுக்கும் இடையே நீண்டகால அரசதந்திர உறவுகள் நிலவி வருகின்றன. மேலும், தொடர்ச்சியான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள், பெரிய நிறுவனங்களுக்கு இடையிலான வர்த்தகத் தொடர்புகள் மூலம் இரு நாடுகளும் தங்களது ஒத்துழைப்பை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது வெளியுறவு அமைச்சு ஆலோசனைக் கூட்டம் புதுடெல்லியில் நவம்பர் 9ஆம் தேதி நடைபெற்றது. இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் திருமதி ஸ்ரீபிரியா ரங்கநாதனும், லெபனான் வெளியுறவு அமைச்சின் தலைமைச் செயலாளர் அப்தெல் சத்தார் இசாவும் இக்கூட்டத்திற்கு இணைத் தலைமை தாங்கினர்.
இதில் வர்த்தகம், முதலீடு, மின்னிலக்கப் பொது உள்கட்டமைப்பு, மருந்துத் துறை, பாதுகாப்பு மற்றும் கலாசாரப் பரிமாற்றங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும், வட்டார மற்றும் அனைத்துலக நிலவரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்ரூட்டிற்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்ட திருமதி ரங்கநாதன், லெபனான் பிரதமர் நவாஃப் சலாம் மற்றும் அப்தெல் சத்தார் இசா ஆகியோரைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆய்வு செய்ததைத் தொடர்ந்து இக்கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
