ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் அதிபருடன் ஜெய்சங்கர் பேச்சு

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் அதிபருடன் ஜெய்சங்கர் பேச்சு

2 mins read
5a39df7d-0a1a-4664-973d-96ba4e46b021
ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் அதிபர் ஷேக் முகமது பின் ஸயீத் அல் நஹ்யானைச் சந்தித்துப் பேசினார் ஜெய்சங்கர். - படம்: நியூஸ் ஆன் ஏர்

புதுடெல்லி: மத்திய கிழக்கில் நெருக்கடி நீடித்துவரும் நிலையில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் அதிபர் ஷேக் முகமது பின் ஸயீத் அல் நஹ்யானைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, போர்ச் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளியல் தாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் தமது சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் தீவிரமடைந்தபோது, இந்தியச் சமூகத்தின் நல்வாழ்வை உறுதிசெய்ததற்காகப் பிரதமர் நரேந்திர மோடியின் அன்பான வாழ்த்துகளையும் இந்தியாவின் நன்றியையும் தெரிவித்ததாக அவர் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் எண்ணெய்-எரிவாயுவின் முக்கிய விநியோகிப்பாளராக விளங்கும் அவ்வட்டாரத்தின் பாதுகாப்பு நிலைமையை மதிப்பிடவும் திரு ஜெய்சங்கர் பயணம் மேற்கொண்டதாகத் தெரிகிறது.

கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 11) மாலை, அவர் வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் ஸயீத் அல் நஹ்யானைச் சந்தித்து, வட்டாரச் சூழ்நிலை மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து விவாதித்ததாக அவரது சமூக ஊடகப் பதிவு தெரிவிக்கிறது.

மத்திய கிழக்கு வட்டாரத்தில் மிகவும் தீவிரமான மோதல் நிலவி வந்துள்ளது என்று பின்னர் ‘ஏஎன்ஐ’ செய்தி முகவையிடம் குறிப்பிட்ட அவர், இப்பகுதியின் நிலைத்தன்மை, பாதுகாப்பில் இந்தியாவுக்கு மிக முக்கியப் பங்கும் பெரும் அக்கறையும் உள்ளது என்றார்.

“இங்கு நேரடியாக வந்து, எங்கள் நலன்களை வெளிப்படுத்தவும் இந்தியச் சமூகத்தின் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் ஒரு வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

“ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் தலைமையுடனான தனது கலந்துரையாடல்களில் இந்தியச் சமூகத்தின் நலன்களுக்கே முதன்மையான முன்னுரிமை அளிக்கப்பட்டது,” என்றார் திரு ஜெய்சங்கர்.

மேலும், பொருளியல், எரிசக்தி போன்ற அம்சங்களிலும் அந்தப் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தியதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுக்கு எரிபொருள் வழங்கும் நாடுகளில் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளும் கத்தாரும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் இந்தியாவின் ஐந்தாவது பெரிய எரிபொருள் மூலமாகும். இது மொத்தக் கச்சா எண்ணெய் இறக்குமதியில் கிட்டத்தட்ட 6% பங்களிக்கிறது.

மேலும், ‘எல்பிஜி’, பெட்ரோலியப் பொருள்களுக்கு மூன்றாவது பெரிய மூலமாகவும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் விளங்குகிறது.

குறிப்புச் சொற்கள்