ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நிதி மோசடியில் ஈடுபட்ட 8,000க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) தெரிவித்தனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வரும் தொடர் சோதனையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு தேசியப் புலனாய்வு முகமை மேற்கொண்ட கடும் நடவடிக்கையால், ஜம்மு-காஷ்மீருக்குள் சட்டவிரோதமாகப் பணம் கொண்டுவரப்படுவது முற்றிலுமாகத் தடுக்கப்பட்டது.
அதனால், பயங்கரவாதிகள் தற்போது ‘எண்ம ஹவாலா’ எனப்படும் டிஜிட்டல் ஹவாலா முறையைப் பயன்படுத்தி நாட்டுக்கு எதிரான சதிச் செயல்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
அதன்படி, வங்கிக் கணக்கு வைத்திருப்போரை அணுகி அவா்களுக்குக் குறிப்பிட்ட தொகையைத் தருவதாக ஆசை காட்டி, அவர்களது வங்கிக் கணக்குகள் மூலம் பணப் பரிமாற்றம் செய்துள்ளனர்.
ஒரு மோசடிப் பேர்வழி கிட்டத்தட்ட 10 முதல் 30 வங்கிக் கணக்குகளைக் கையாண்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை அறிமுகம் இல்லாதவர்களிடம் பகிர்வதைத் தவிர்த்தால் இத்தகைய மோசடிகளைத் தடுக்க முடியும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அண்மையில், ‘அன்சார் இன்டெரிம்’ என்ற பெயரில் பயங்கரவாத அமைப்பை நிறுவிய, நன்கு படித்த இளைஞர்கள் சிலரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் 2016 முதல் தேசவிரோதச் செயல்களில் ஈடுபட முயன்றுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
டெல்லியில் கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்த மருத்துவர் உமர்-உன்-நபி என்பவரும் 2016, 2018ல் பயங்கரவாத அமைப்புகளில் இணைய முயன்றவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

