ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் முதற்கட்ட வாக்களிப்பு

2 mins read
இளையர்கள், முதல்முறை வாக்காளர்களை ஜனநாயகக் கடமையாற்ற பிரதமர் மோடி அமித் ஷா, கார்கே அழைப்பு
8b6f44a2-35df-445e-88e6-3c59d3256dd9
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு தெற்கு காஷ்மீர், இந்திய காஷ்மீரின் செனாப் பள்ளத் தாக்குப் பகுதிகளில் நடைபெற்றது. தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் வாக்களிப்பதற்காக மக்கள் வரிசை பிடித்து நிற்கும் நிலையில், இந்திய துணை ராணுவ வீரர் ஒருவர் பாதுகாப்புக்கு நிற்கிறார். - படம்: இபிஏ

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு அங்குள்ள 24 தொகுதிகளில் புதன்கிழமை (செப்டம்பர் 18) காலை 7 மணியளவில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.

இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு முடிவடைந்த வாக்குப்பதிவில் 58.19% வாக்குகள் பதிவாகி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடும் குளிர் காரணமாக காலை வேளையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும்கூட வாக்குப்பதிவு சற்று மந்தமாக இருந்ததாகவும் ஆனால், எவ்வித சர்ச்சைகள், பிரச்சினைகள் இன்றி வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அமைதியாக வாக்களித்ததாகவும் தகவல்கள் குறிப்பிட்டன.

இதனிடையே, தேர்தலில் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றும்படி காஷ்மீர் மக்களுக்கு, குறிப்பாக இளையர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் அழைப்பு விடுத்திருந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் உள்ள அனைவரும் பெருமளவில் வாக்களித்து ஜனநாயகத்தின் திருவிழாவை வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

“குறிப்பாக இளையர்கள், முதல்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை திறம்பட ஆற்றவேண்டும்,” என்று வேண்டுகோள் விடுத்தார்.

முதல்கட்டமாக காஷ்மீர் பகுதியில் உள்ள 16 தொகுதிகள், ஜம்மு பகுதியில் உள்ள 8 தொகுதிகள் என யூனியன் பிரதேசத்தில் உள்ள 24 சட்டசபைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இரண்டாவது, மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு முறையே செப்டம்பர் 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அக்டோபர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்