ஆர்ப்பாட்டத்தால் முடங்கிய ஜம்மு-கா‌ஷ்மீர்

ஆர்ப்பாட்டத்தால் முடங்கிய ஜம்மு-கா‌ஷ்மீர்

2 mins read
9c8d8a62-60eb-41d1-b76b-543774624f9c
லால் சவுக்கில் உள்ள வரலாற்றுபூர்வ மணிக்கூண்டு உள்ள இடத்தில் மக்கள் கூடுவதைக் காவல்துறை அதிகாரிகள் தடுத்துள்ளனர். - படம்: ஏஎஃப்பி

ஸ்ரீநகர்: கா‌ஷ்மீரின் ஒருசில பகுதிகளில் அதிகாரிகள் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளனர்.

ஈரானியத் தலைவர் அயதுல்லா அலி காமெனியின் மரணத்தைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் வலுத்துவரும் நிலையில், ஸ்ரீ நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மணிக்கூண்டு இருக்கும் வட்டாரத்தில் பொதுமக்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீது நடத்திய ஒருங்கிணைந்த தாக்குதலில் திரு அயதுல்லா மாண்டார்.

ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து ஜம்மு கா‌ஷ்மீரில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து ஜம்மு கா‌ஷ்மீரில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. - படம்: இபிஏ

ஸ்ரீநகரிலும் அதைச் சுற்றியுள்ள பிற பகுதிகளிலும் பாதுகாப்பை வலுப்படுத்த காவல்துறையும் உதவி ராணுவ அதிகாரிகளும் ஆங்காங்கே பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

கடைகளும் வர்த்தகங்களும் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. சாலைகளில் வாகனங்கள் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

திரு காமெனியின் மரணத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜம்மு, கா‌ஷ்மீரில் உள்ள முடஹிடா மஜ்லிஸ் இ உலாமா அமைப்பு கடைகள் அனைத்தையும் மூடப்படும்படி கூறியது. அதற்கு எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி அதன் ஆதரவைத் தெரிவித்தது.

ஜம்மு-கா‌ஷ்மீரில் சட்ட, ஒழுங்கை நிலைநாட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகக் காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

லால் சவுக்கில் உள்ள பிரபல மணிக்கூண்டுக்குச் செல்லும் வழிகளை அதிகாரிகள் மறித்துள்ளனர். நேற்று அங்கு ‌ஷியா முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எதிராக அமைதி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு தற்காலிக சிறப்பு தகுதியையும் தனி அரசியலமைப்பையும் வழங்கிய சட்டம் 370 மீட்கப்பட்டபோது மிகப் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அதையடுத்து அதேபோன்ற ஓர் ஆர்ப்பாட்டம் தற்போது ஜம்மு கா‌ஷ்மீரில் நடைபெறுவதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டங்களை முன்னிட்டு ஜம்மு-கா‌ஷ்மீரில் உள்ள கல்விக் கழகங்கள் அனைத்தும் இரண்டு நாள்களுக்கு மூடப்பட்டதுடன் மார்ச் 2, 3ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் பின்னொரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்