ஜந்தர் மந்தர்: மக்களின் எதிர்ப்புக்கான அடையாளக் குறியீடு

ஜந்தர் மந்தர்: மக்களின் எதிர்ப்புக்கான அடையாளக் குறியீடு

படம்: ப்ளூம்பெர்க்

14 Oct 2026 - 4:43 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜந்தர் மந்தர் பகுதி, போராட்டக்களமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த உரிமையை டெல்லி காவல்துறை அதிகாரபூர்வமாகத் திரும்பப் பெற்றுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் கோரிக்கைகளும் எதிர்ப்புக் குரல்களும் எதிரொலிக்கும் மையப் புள்ளியாக விளங்கியது ஜந்தர் மந்தர் பகுதி. இனி அங்கு போராட்டக் குரலெழுப்ப அனுமதி இல்லை.

இந்திய நாடாளுமன்றத்துக்கு மிக அருகில் அமைந்துள்ள ஜந்தர் மந்தர் பகுதி, தொழிலாளர் சங்கங்கள், ஓய்வுபெற்ற ராணுவத்தினர், மாணவர் அமைப்புகள், விவசாயிகள், சமூக ஆர்வலர்களுக்கு ஒரு முக்கியமான களமாக இருந்து வந்தது. அதிகார மையங்களின் கவனத்தை ஈர்க்கவும் ஊடகங்களின் பார்வையைப் பெறவும் அந்த இடம் மிகவும் ஏதுவாக இருந்தது.

அண்மையில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம், தேர்வு முறை முறைகேடுகளுக்கு எதிராக இளையர்கள் மற்றும் சிஜேபி அமைப்பினர் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து ஜந்தர் மந்தர் தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் ஜனநாயக உரிமைக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் விடுக்கப்பட்ட சவாலாகவே இதை சமூக ஆர்வலர்கள் பார்க்கின்றனர்.

ஜந்தர் மந்தர் பகுதிக்கு மாற்றாக மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை டெல்லியின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள சமூக ஆர்வலர்கள், அதன் மையப்பகுதியை விட்டுத் தள்ளி, ஒதுக்குப்புறமான இடங்களில் போராட்டங்களை நடத்துவது அதன் வீரியத்தையும் தாக்கத்தையும் குறைத்துவிடும் என்று கவலை தெரிவிக்கின்றனர்.

ஜந்தர் மந்தர் சாலை பங்களாக்கள், பெரிய கடைகளால் சூழப்பட்ட இடமாகும். அங்கு போராட்டம் நடத்துபவர்கள் அருகில் உள்ள சாலைகளையும் பயன்படுத்துகின்றனர்.

மேலும், ஜந்தர் மந்தர் நாடாளுமன்றத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலும் முக்கியமான அரசாங்கக் கட்டடங்களுக்கு மத்தியிலும் அமைந்துள்ளது.

இது போராட்டக்காரர்களுக்குத் தேவையான தண்ணீர், மலிவான உணவு, கழிப்பறைகள், மர நிழல் போன்ற வசதிகளை வழங்குகிறது. அதோடு இங்கு போராட்டம் நடத்த கட்டணம் கிடையாது. போராட்டம் நடத்தப் புதிதாக ஒதுக்கப்பட்ட இடங்களுக்குக் கட்டணம் உண்டு.

ஜந்தர் மந்தர் என்பது வெறும் ஓர் இடமல்ல. அது மக்களின் எதிர்ப்புணர்வைக் காட்டும் அடையாளம் எனப் போராட்டக்காரர்கள் உறுதியுடன் கூறுவதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

குறிப்புச் சொற்கள்
டெல்லிபோராட்டம்நாடாளுமன்றம்விவசாயிஜனநாயகம்