புதுடெல்லி: இந்திய - ஜப்பான் விமானப்படைகள் இணைந்து நடத்திய இரு வார ‘வீர் கார்டியன் 2026’ கூட்டுப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில், ‘வீர் கார்டியன்’ ஆகாயப்படைப் பயிற்சி இணைந்து செயல்படும் திறனை மையமாகக் கொண்டிருந்ததுடன், இந்தியா-ஜப்பான் இடையே விரிவடைந்து வரும் பாதுகாப்பு உறவின் ஆழத்தைப் பறைசாற்றுவதாக அமைந்தது.
ராஜஸ்தானின் ஜோத்பூர் விமானப்படை நிலையத்தில் செப்டம்பர் 9 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்ற அப்பயிற்சியில் ஜப்பானின் போர் விமானங்கள் முதல்முறையாக இந்திய மண்ணில் பயிற்சியில் ஈடுபட்டன.
கூட்டு ராணுவப் பணி திட்டமிடல், வான்வழி போர் நடவடிக்கைகள், செயல்பாட்டு நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ளுதல் ஆகியவை பயிற்சியில் இடம்பெற்றன.
இந்திய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங், ஜப்பான் வான் தற்காப்புப் படையின் தலைமைத் தளபதி ஜெனரல் டேகேஹிரோ மொரிட்டா ஆகியோர் தேஜஸ் போர் விமானத்தில் பறந்து பயிற்சியைப் பார்வையிட்டனர்.
வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த படைகளும் தகவல் தொடர்பு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படும் திறனை மேம்படுத்துவதே பயிற்சியின் முதன்மை நோக்கம்.
இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கெனவே ‘தர்மா கார்டியன்’ தரைப்படைப் பயிற்சியும், ‘ஜிமெக்ஸ்’ கடற்படைப் பயிற்சியும் நடைபெற்று வருகின்றன.
உலகக் கடல் வணிகத்தில் 60 விழுக்காடு வகிக்கும் இந்தோ-பசிபிக் வட்டாரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படுகிறது.
மேலும், ‘யுனிகார்ன்’ எனப்படும் மேம்பட்ட ரேடியோ ஆண்டெனா அமைப்பை இணைந்து தயாரிக்க பாரத் எலெக்ட்ரானிக்சும் ஜப்பானிய நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்துள்ளன.
