பெங்களூரு: பெங்களூரின் கெம்பெகவுடா அனைத்துலக விமான நிலையத்திலுள்ள முனையம் 2க்குச் சென்ற ஜப்பானியர் ஒருவர், தாம் அசந்து போனதைக் காணொளியாகப் பதிவுசெய்து இன்ஸ்டகிராம் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஜப்பானைச் சேர்ந்த அவர், ஒரு பயணக் காணொளிப் பதிவர் (travel vlogger). இவரைப் பொறுத்தவரை, பெங்களூரின் கெம்பெகவுடா அனைத்துலக விமான நிலையத்தில் அமைந்துள்ள இரண்டாவது முனையம் அதன் கவர்ச்சிமிகு, சுற்றுச்சூழலுக்கு உகந்த வடிவமைப்பால் பார்ப்போரைப் பரவசப்படுத்துகிறது.
கிகி சென் என்ற அந்தப் பெண், விமான நிலையத்திற்கு வருகையளித்ததை அடுத்து தாம் அதிசயித்து அவ்விடத்தை வலம்வருவதாக அந்தக் காணொளி அமைந்துள்ளது.
வழக்கத்திற்கு மாறாக அமைந்த இந்த விமான நிலையம் இந்தியாவில் அமைந்துள்ளதா என்பதை அவரால் நம்ப முடியவில்லை. அத்துடன் இந்தியாவிலேயே ஆகச் சிறந்தது என்றும் அவ்விடத்திற்கு கிகி சென் முத்திரை குத்திவிட்டார்.
இதையடுத்து, அவரது காணொளியை உலகெங்கிலும் உள்ளோர் கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.
பொழுதுபோக்கு உல்லாசத்திற்கான பகுதிகள், ஓய்வெடுப்பதற்கான இடங்கள், உணவு உண்பதற்கான பலதரப்பட்ட தெரிவுகள் ஆகியவற்றைச் சுட்டிய அந்த ஜப்பானியப் பெண், அனைத்தும் மூங்கிலில் கட்டப்பட்டதை வியந்து கூறினார்.
இதற்கிடையே, ‘ஆக அழகான விமான நிலைய முனையம்’ என்ற விருதை அவ்விடம் கடந்த ஆண்டு பெற்றதாக இணையவாசி ஒருவர் பதிவிட்டார்.
“ஓர் இந்தியராக என்னாலேயே இதை நம்ப முடியவில்லை,” என்றார் மற்றொருவர்.
தொடர்புடைய செய்திகள்
இதுவரை ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட பார்வைகளை இக்காணொளி பெற்றுள்ளது.

