ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு 11 பேர் கொண்ட குழு அமைப்பு

ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு 11 பேர் கொண்ட குழு அமைப்பு

படம்: நியூஸ் ஆன் ஏர்

07 Aug 2026 - 5:26 pm

2 mins read

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில், போராட்டத்தை முன்னெடுத்துள்ள மாணவர் அமைப்பு, அரசுத்தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த 11 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது.

அரசுப் பணியாளர் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, ஜார்க்கண்ட் மாணவர்கள், இளையர்கள் நடத்திவரும் தொடர் போராட்டம் இரண்டு வாரங்களைக் கடந்துள்ளது.

போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் பேச்சுவார்த்தைக்குக் தயார் என மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.

இதை ஏற்று போராட்டக்காரர்கள் சார்பாக பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டாலும் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள ஆறு மாணவர்கள் போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை.

மாணவர்கள் கோரிக்கைகள்

குடிமைப் பணி முதன்மைத் தேர்வை (Civil Services Preliminary Examination) உடனடியாக ரத்து செய்ய வேண்டும், தேர்வு முறைகேடுகள் குறித்து சுதந்திரமான அமைப்பின் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும், தேர்வு முகமைகளில் வெளிப்படையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் ஆகிய கோரிக்கைகளை மாணவர்கள் தரப்பு முன்வைத்துள்ளது.

மாணவர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

ஆகஸ்டு 13ஆம் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மாணவர்களுடன் இணைந்து தாமும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பாஜக எம்பி நிஷி காந்த் துபே தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என மாணவர்கள் தரப்பு அறிவித்துள்ளது.

அரசு அதிகாரிகள் தங்களைச் சந்தித்துப் பேசியதாகவும் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால் போராட்டம் தீவிரமடையும் என்றும் மாணவர் அமைப்பின் தலைவர் ராதே குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆகஸ்டு 10ஆம் தேதி சட்டமன்றத்தை முற்றுகையிடும் வகையில் பேரணியாகச் செல்லப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, ராஞ்சி நகரில் தற்போது கனமழை பெய்துவருகிறது.

எனினும், மழையைப் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்