தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மணமான மறுநாளே போர்முனையில் வீரர்; நாட்டுப்பற்றை நிலைநாட்டிய மணமகள்

2 mins read
d77b4e91-fca1-4ca2-bc0a-52c6ac50da16
வெள்ளிக்கிழமை மணமுடித்ததும் சனிக்கிழமை போருக்குக் கிளம்பிவிட்டார் தியாகி யாதவ். - படம்: இந்திய ஊடகம்

பாட்னா: இந்தியா-பாகிஸ்தான் போர்ச் சூழலில் இந்திய ராணுவ வீரர் ஒருவரின் நெகிழ்ச்சியான செயல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

பீகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தின் நந்தன் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் தியாகி யாதவ்.

காஷ்மீரின் ஸ்ரீநகரில் பணியமர்த்தப்பட்டு உள்ள இளையரான அவர், தமது திருமணத்திற்காக விடுப்பு எடுத்துக் கொண்டு தமது சொந்தக் கிராமத்திற்கு வந்திருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை (மே 9) அவருக்கும் பிரியா யாதவ் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.

பாகிஸ்தானுடன் போர்ப் பதற்றம் தொடங்கியதால், இந்திய ராணுவம் வீரர்களின் விடுப்பை ரத்து செய்து, அவர்களைப் பணிக்குத் திரும்புமாறு அறிவுறுத்தியது.

அதை ஏற்று, மணமான மறுநாளே பணிக்குக் கிளம்பிவிட்டார் தியாகி யாதவ். அவரது பெற்றோரும் தாய்நாட்டுக்குச் சேவை செய்வது முக்கியம் எனக் கூறி அவரை அனுப்பி வைத்துள்ளனர்.

மணமகள் பிரியா யாதவும் தம் கணவரைப் பெருமிதத்துடன் வழியனுப்பி வைத்துள்ளார்.

ஊடகங்களில் அந்தப் பெண் கூறும்போது, “என் கணவர் தியாகி யாதவ், தாய்நாட்டின் மேல் பாசமும் பற்றும் நிறைந்தவர். உறுதியான எண்ணம் கொண்ட அவர், திருமணமான மறுநாளே போர்முனைக்குச் சென்றுவிட்டார். நான் எதைப் பற்றியும் சிந்திக்காமல் என் கணவர் தன் கடமையை செய்வதற்காகப் பெருமையுடன் வழியனுப்பி வைத்தேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

ராணுவ வீரர் தியாகி யாதவை அவரது திருமணத்துக்கு கூடியவர்களைவிட அதிக எண்ணிக்கையிலான நந்தன் கிராம மக்களும் சுற்று வட்டாரத்தினரும் ஒன்றுதிரண்டு வழியனுப்பி வைத்துள்ளனர்.

அந்தச் சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக ஊடங்களில் தீயாகப் பரவி வருகின்றன.

குறிப்புச் சொற்கள்