‘ஜெயலலிதாவின் பொருள்களைத் தீபாவிடம் ஒப்படைக்க முடியாது’

2 mins read
ddedb3bb-86dd-4019-a03b-9fb205f2fe3d
கர்நாடகா கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் விலை உயர்ந்த பொருள்கள். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

பெங்களூரு: காலஞ்சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விலையுயர்ந்த பொருள்களை அவரது வாரிசான தீபாவிடம் ஒப்படைக்க முடியாது என்று கர்நாடகா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உட்பட மூன்று பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்தனர்.

முன்னதாக சொத்து குவிப்பு புகாரைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், ஜெயலலிதா வீட்டில் சோதனையிட்டு தங்க-வைர நகைகள், விலை உயர்ந்த பட்டுப் புடவைகள், காலணிகள், கணினிகள் உட்பட பல்வேறு பொருள்களைப் பறிமுதல் செய்தனர்.

இந்த விலை உயர்ந்த பொருள்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்டோரின் பொருள்களை ஏலம் விடுவதற்காக மாநில சிறப்பு வழக்கறிஞர் கிரண் ஜவலியை அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமனம் செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம், ஜெயலலிதாவின் விலை உயர்ந்த பொருள்கள் விரைவில் ஏலம் விடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், ஜெயலலிதா சொத்து வழக்கு தொடர்பாக கர்நாடகா சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ.தீபா மனு தாக்கல் செய்தார்.

மனுவில் கர்நாடக கருவூலத்தில் உள்ள கோடிக்கணக்கு மதிப்பிலான ஜெயலலிதாவின் சொத்துகளைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் வாரிசாக தன்னை ஏற்றுக் கொண்டு ஏற்கெனவே பல்வேறு சொத்துகளை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது என்றும் இந்தக் கருவூலத்தில் உள்ள கோடிக்கணக்கான சொத்துகளையும் என்னிடம் தரவேண்டும் என்றும் வாரிசு என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் நகலை மனுவோடு இணைத்து தீபா தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் திங்கட்கிழமை (ஜனவரி 13) இந்த வழக்கில் நீதிபதி இறுதி தீர்ப்பு வழங்கினார்.

அதில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துகளை தீபாவிடம் ஒப்படைக்க முடியாது என்று கூறிய நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்தார்.

மேல்முறையீடு செய்யவேண்டும் என விரும்பினால் உச்ச நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தீபாவை நீதிபதி அறிவுறுத்தினார்.

ஜெயலலிதாவின் வீட்டிலிருந்து 28 கிலோ தங்கம், 800 கிராம் வெள்ளி, 10,000 புடவைகள், 11 கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குறிப்புச் சொற்கள்