தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வானுயரப் பறக்கும் ஜெட் ஏர்வேஸ்

2 mins read
7d56bb09-b845-433f-a502-1e76df7d1af3
2013ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று மும்பை விமான நிலையத்தில் தரையிறங்க தயாராவதைக் காணும் மக்கள். படம்: புளூம்பெர்க் -

ஜெட் ஏர்வேஸ் விமானம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் ஹைதராபாத் நகரிலிருந்து தலைநகர் புதுடெல்லிக்கு நேற்று வியாழக்கிழமை (மே 5) சோதனை ஓட்டமாக ஒன்றரை மணி நேரம் பறந்து இயக்கிப் பார்க்கப்பட்டது. ஹைதராபாத்துக்குத் திரும்பிய அந்த விமானம், அங்குள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியது.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நிதி நெருக்கடி காரணமாக விமானச் சேவையை நிறுத்திக்கொண்டது. அதன்பின், ஜலான் கல்ராக் கூட்டமைப்பு, தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயத்தில் மறுகட்டமைப்புத் திட்டத்தைத் தாக்கல் செய்து மீண்டும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை இயக்க ஒப்புதல் பெற்றது.

நேற்றைய தினம் (மே 5), ஜெட் ஏர்வேசின் 29வது பிறந்தநாள். இந்த மைல்கல்லைக் குறிக்கும் விதமாக, ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்றின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

ஜெட் ஏர்வேஸ் முறைப்படி வர்த்தகச் சேவைக்கு வரும் முன் விமானம் ஒன்று சோதனை ஓட்டத்தில் பறந்து, விமானக் கட்டுப்பாட்டு இயக்குநரிடமிருந்து சான்று பெற வேண்டும்.

விமானத்தின் சோதனையோட்டம் குறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அதன் டுவிட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டது.

"இன்று மே 5ஆம் தேதி எங்கள் நிறுவனத்தின் 29வது பிறந்தநாள். இன்று ஜெட் ஏர்வேஸ் மீண்டும் பறந்துள்ளது. இந்த நாளுக்காக காத்திருந்த, பிரார்த்தனை செய்த எங்கள் அனைவருக்கும் இது உணர்ச்சிகரமான நாள். ஜெட் ஏர்வேஸ் வாடிக்கையாளர்களுக்கும் இந்த நாள் உணர்ச்சிகரமானது என நம்புகிறோம்," என அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீண்டும் வர்த்தகச் சேவையைத் தொடங்குவதற்காக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 200க்கும் அதிகமான ஊழியர்களைப் பணிக்கு எடுத்துள்ளது. அந்நிறுவனம் வர்த்தக விமானச் சேவையை எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் இப்போதைக்கு இல்லை. ஆனால், கோடைக்காலத்தில் முதல் பயணத்தை அது தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்