திருவனந்தபுரம்: சபரி மலை ஐயப்பன் கோவில் தங்கம் திருடு போன வழக்கில், கோவில் நிர்வாக வாரிய முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏறக்குறைய 4.5 கிலோ தங்கம் மாயமானது தொடர்பான இந்த வழக்கில் விஜயகுமாரை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஏற்கெனவே ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐயப்பன் கோவில் கருவறைக்கு வெளியே உள்ள தங்கத்தாலான இரு துவார பாலகர்கள் சிலைகள் செப்பனிடும் பணிக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டன.
அப்போது அவற்றின் மொத்த எடை கோவில் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டது.
செப்பனிடும் பணி முடிந்து மீண்டும் கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட இரு சிலைகளையும், எடைபோட்டுப் பார்த்தபோது அவற்றின் எடை 4.5 கிலோ குறைந்திருந்தது.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த திருட்டு விவகாரம் குறித்து கேரள காவல் துறை சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரித்து வருகிறது.
இதனிடையே, சபரிமலையில் புதன்கிழமை (டிசம்பர் 31) மகர விளக்கு கால பூசைகள் தொடங்குகின்றன.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

