பீகாரில் ரூ.40 கோடி நகைகள் கொள்ளை; மூவர் கைது

பீகாரில் ரூ.40 கோடி நகைகள் கொள்ளை; மூவர் கைது

“இது வெறும் முன்னோட்டம்தான்; மீண்டும் வருவோம்” என திருடர்கள் மிரட்டல்
படங்கள்: நியூஸ்24ஆன்லைன்/ ‘எக்ஸ்’

19 Nov 2026 - 6:57 pm

2 mins read

பெட்டியா: பீகார் மாநிலம் மேற்குச் சம்பாரண் மாவட்டத்திலுள்ள பெட்டியாவில், ஆயுதமேந்திய எட்டுக் கொள்ளையர்கள் ரூ.40 கோடி மதிப்புள்ள நகைகளைப் பட்டப்பகலில் கொள்ளையடித்துச் சென்றனர். நேபாள எல்லையை ஒட்டியுள்ள பெட்டியாவில் புதன்கிழமை பிற்பகலில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

இவ்வழக்கில் தொடர்புடையதாக நம்பப்படும் சந்தேகப் பேர்வழிகள் மூவர் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டனர். ஏனைய கொள்ளையர்களைப் பிடிக்க பெட்டியா காவல்துறையினர் அதிரடிச் சோதனைகளையும் தீவிரத் தேடுதல் நடவடிக்கையையும் மேற்கொண்டுவருகின்றனர்.

பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் ரேணு தேவியின் இல்லத்திற்கு அருகிலுள்ள நகைக்கடையில் இக்கொள்ளை நடந்துள்ளது.

குற்றவாளிகளைப் பிடிக்கத் துணைக் காவல்துறைத் தலைவர் (டிஐஜி) ஹர்கிஷோர் ராய், துணைக் கோட்டக் காவல்துறை அதிகாரி (எஸ்டிபிஓ) அஜித் குமார் தலைமையில் சிறப்புப் படை அமைத்துள்ளார்.

சுப்ரியா திரையரங்கு அருகிலுள்ள கடைக்குள் நுழைந்த கொள்ளையர்கள், ஊழியர்களைத் துப்பாக்கி முனையில் பிணையாளிகளாகப் பிடித்தனர்.

வாடிக்கையாளர்களின் கைப்பேசிகளைப் பறித்ததால் காவல்துறை அவசர எண்ணான 112ஐ யாராலும் தொடர்புகொள்ள முடியவில்லை. பின்னர் 35 நிமிடங்களில் தங்கம், வெள்ளி, வைர நகைகளைச் சூறையாடி மூன்று மோட்டார் சைக்கிள்களில் தப்பினர்.

முகத்தை மறைக்காமல் வந்த கொள்ளையர்கள், கொள்ளையைத் தடுக்க முயன்ற ஊழியர்களைத் தாக்கினர். “இது வெறும் முன்னோட்டம்தான்; மீண்டும் வருவோம். இது ஒரு திரைப்படம்,” என அவர்கள் மிரட்டிவிட்டுச் சென்றனர்.

சம்பவ இடத்தைப் பார்வையிட்டு நிலவரத்தை ஆய்வுசெய்த மூத்த காவல்துறைக் கண்காணிப்பாளர் குமார் கௌதமிடம், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் துல்லியமான மதிப்பைக் கணக்கிட நேரமாகும் என்று கடை உரிமையாளர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஆராவிலுள்ள ‘தனிஷ்க்’ நகைக்கடையில் ரூ.100 கோடி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதற்கு அடுத்து, பீகாரில் நிகழ்ந்த இரண்டாவது பெரிய கொள்ளை இதுவாகும்.

முன்னாள் துணை முதலமைச்சர் இல்லத்திற்கு அருகிலேயே துணிகரக் கொள்ளை நிகழ்ந்துள்ளதாகவும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் சன்பட்டியா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக் ரஞ்சன் சாடியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்