ஜார்க்கண்ட் தேர்வு முறைகேடு: குற்றப் புலனாய்வுப் பிரிவின் ரகசிய அறிக்கையால் கொந்தளிப்பு

ஜார்க்கண்ட் தேர்வு முறைகேடு: குற்றப் புலனாய்வுப் பிரிவின் ரகசிய அறிக்கையால் கொந்தளிப்பு

2 mins read
37f52415-2039-494b-8ba2-a48c961766ef
தேர்தல் முறைகேடுகளுக்கு முடிவுகட்ட வலியுறுத்திக் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  - படம்: சியாசத்
Google News Preferred Icon

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணியாளர் தேர்வில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்துக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணையின்போது பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

இதனால் அரசுத் தேர்வு நேர்மையாக நடந்ததாகக் கூறிவந்த அம்மாநில அரசுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறையின் ரகசிய அறிக்கையில் தேர்வுக்கான கேள்விகளும் அவற்றுக்கான விடைகளும் தேர்வு தொடங்குவதற்கு முன்பே வாட்ஸ்அப் குழுக்களில் பரவலாகப் பகிரப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற இரு தேர்வுகளில் இத்தகைய முறைகேடு நடந்ததாகப் புலனாய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இணையம் மூலமாக மட்டுமன்றி, தொலைபேசி அழைப்புகள் மூலமாகவும் நேரடியாகவும் தேர்வு எழுதுபவர்களுக்கு அதில் இடம்பெற உள்ள கேள்விகளும் விடைகளும் விநியோகிக்கப்பட்டன.

ஜார்க்கண்ட் மாநிலம் தொடங்கி நேப்பாளம் வரை இந்த வினாத்தாள் வியாபாரம் நடந்ததாகக் குற்றப் புலனாய்வுத் துறை கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜார்க்கண்ட் அரசிடம் அளித்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், இந்த அறிக்கையை மாநில அரசு கிடப்பில் போட்டுவிட்டதாகத் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் அமைப்பினர் குற்றஞ்சாட்டினர்.

தேர்தல் முறைகேடுகளுக்கு முடிவுகட்ட வலியுறுத்திக் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாணவர்கள் 15 பேர், ராஞ்சி நகரில் போராட்டம் நடைபெற்று வரும் திடலில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவில் இடம்பெற்றுள்ள பல்வேறு முக்கியமான விவரங்கள் முழுமையாக வெளியாகி உள்ளதாகவும் நீதிமன்றத்தின் கைகளில் இருக்கும் ஆதாரங்களும் அறிக்கையும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் முகத்திரை கிழித்தெறியப்பட்டதாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்