ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களில் 89 விழுக்காட்டினர் கோடீஸ்வரர்கள் என்று தெரியவந்துள்ளது.
அங்கு, ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), பாரதிய ஜனதா கட்சியைத் (பாஜக) தோற்கடித்து ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.
இந்நிலையில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் பெரும்பாலோனோர் கோடீஸ்வரர்கள் என்றும் அவர்களில் காங்கிரசின் ராமேஷ்வர் ஓரான் ரூ.42.20 கோடி மதிப்பிலான சொத்துகளுக்குச் சொந்தக்காரர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் தேர்தல் கண்காணிப்பு, ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம், வெற்றிபெற்ற வேட்பாளர்கள் 81 பேரில் 80 பேரின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வுசெய்தது. அதையடுத்து, 2024ல் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் 71 பேர் கோடீஸ்வரர்கள் என்று அச்சங்கம் கண்டறிந்துள்ளது.
ஒப்புநோக்க, 2019ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையைவிட இது 20 விழுக்காடு அதிகம்.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட 81 பேரில் 56 பேர் கோடீஸ்வரர்கள் என்றும் 2014ஆம் ஆண்டு வெற்றிபெற்றோரில் 41 பேர் கோடீஸ்வரர்கள் என்றும் சங்கத்தின் அறிக்கை கூறுகிறது.
இந்த ஆண்டின் கோடீஸ்வர சட்டமன்ற உறுப்பினர்களில் 28 பேர் ஜேஎம்எம் கட்சியினர். பாஜகவினர் 20 பேர், காங்கிரஸ் கட்சியினர் 14 பேர் என்று கூறப்பட்டது.

