தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எண்பது மாணவிகளின் மேல்சட்டைகளைக் கழற்றி வீட்டுக்கு அனுப்பிய தலைமையாசிரியர்

2 mins read
0e80313b-479e-4a67-9c39-da7bb6118206
ஜார்கண்டில் உள்ள பள்ளியில் மாணவிகளுக்கு சிக்கல் ஏற்பட்டதால் பெற்றோர் ஆத்திரமடைந்துள்ளனர். - படம்: ஊடகம்

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் எண்பது மாணவிகளின் மேல்சட்டைகளைக் கழற்றி தலைமை ஆசிரியர் வீட்டுக்கு அனுப்பியதால் பெற்றோர் கொதிப்படைந்தனர்.

தன்பாத் மாவட்டத்தில் திக்வாடியில் உள்ள பிரபல பள்ளிக்கூடத்தில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.

அப்பள்ளியில் 10ஆம் வகுப்புப் படிக்கும் மாணவிகளுக்கு தேர்வு நடைபெற்றது.

அனைத்து தேர்வுகளும் நிறைவு பெற்ற மகிழ்ச்சியில் வியாழக்கிழமை மாணவிகளில் சிலர் தங்களது தோழிகளின் சட்டைகளில் பெயர் மற்றும் சில வாசகங்களை எழுதினர்.

இதைப்பார்த்த அந்தப் பள்ளியின் முதல்வர், அவர்களை அழைத்து கண்டித்தார்.

அத்துடன் சட்டையில் மாணவிகள் வாசகங்களை எழுதியதால், அவர்களின் சட்டைகளை களைந்துவிட்டு வீட்டுக்குச் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏறக்குறைய 80 மாணவிகள் தங்களது மேல் சட்டைகளைக் கழற்றி தங்களது வீடுகளுக்குச் சென்றனர். மேல் சட்டை இல்லாமல் உள்சட்டை மட்டும் அவர்கள் அணிந்திருந்தனர்.

இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த மாணவிகளின் பெற்றோர், பள்ளிக்குப் படையெடுத்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பள்ளி நிர்வாகம், முதல்வர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது.

ஆனாலும் பெற்றோர் கோபம் தீரவில்லை. முதல்வர் மீது அவர்கள் ஜோராபோகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆனால் பள்ளி முதல்வர், மாணவிகளை சட்டையைக் கழற்றி வீட்டுக்குச் செல்லுமாறு கூறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் பற்றி பேசிய தன்பாத் மாவட்ட ஆட்சியர் மாதவி மிஸ்ரா, இதனை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் துணைப் பிரிவு நீதிபதி, மாவட்ட கல்வி அதிகாரி, மாவட்ட சமூக நல அதிகாரி மற்றும் துணைப்பிரிவு காவல் அதிகாரி உள்ளிட்டோர் இடம்பெற்று உள்ளனர். விசாரணை குழு அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே ஜாரியா தொகுதி எம்.எல்.ஏ. ராகினி சிங், இது, வெட்கக்கேடான சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்