ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத்திற்கு மூன்று கட்டங்களாகத் தேர்தல்

2 mins read
b555522b-c043-4699-bf08-3e042027bce2
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார். - கோப்புப்படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் மூன்று கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. அவ்வகையில், பத்தாண்டுகளுக்குப் பிறகு அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

அதன்படி, 90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத்திற்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பதிவான வாக்குகள் அக்டோபர் 4ஆம் தேதி எண்ணப்படும்.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் புதுடெல்லியில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) செய்தியாளர்களைச் சந்தித்தபோது இவ்விவரங்களை அறிவித்தார்.

“ஜம்மு - காஷ்மீருக்கு விரைந்து தேர்தலை நடத்த வேண்டும் எனக் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அம்மாநிலத்தில் 8.709 மில்லியன் பேர் வாக்களிப்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அவர்களில் ஏறக்குறைய 371,000 பேர் முதன்முறை வாக்காளர்கள். அங்கு 11,838 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்,” என்று திரு ராஜீவ் குமார் தெரிவித்தார்.

அம்மாநிலத்திலுள்ள ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 15 - 20 வேட்பாளர்கள் போட்டியிடுவர் என்றும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க 16,000 பாதுகாப்புப் பணியாளர்கள் தேவைப்படுவர் என்றும் தேர்தல் ஆணையம் மதிப்பிட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் கடந்த ஐந்தாண்டுகளாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் இல்லாமல் உள்ளது. இந்நிலையில், 2024 செப்டம்பர் 30ஆம் தேதி அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே, ஹரியானா சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடையும் நிலையில், அங்கும் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலச் சட்டமன்றத்திற்கு ஒரே கட்டமாக அக்டோபர் 1ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, அக்டோபர் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை இடம்பெறும்.

குறிப்புச் சொற்கள்