ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் பாஜக அதிக இடங்களைப் பிடிக்கும் என்ற தேர்தல் கணிப்பைப் பொய்யாக்கியுள்ளது தேர்தல் முடிவுகள். தோ்தலில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) -காங்கிரஸ்-ஆா்ஜேடி கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெ.பி.நட்டா, உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜகவின் முக்கியத் தலைவர்கள் ஜார்க்கண்ட் சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும், தோ்தல் முடிவில் ஜேஎம்எம் தனிபெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. முந்தைய தோ்தலைவிட அதிக இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. மகாராஷ்டிரத்தில் தோல்வியைத் தழுவினாலும் ஜாா்க்கண்டில் ‘இண்டியா’ கட்சிகளின் கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கிறது.
வாக்கு கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் இருப்பதாகக் கூறிய நிலையில், அதனைப் பொய்யாக்கி ஆளும் கூட்டணி பெற்றுள்ள இந்தப் பிரம்மாண்ட வெற்றியில் சோரன் தம்பதியின் பங்கு அளப்பரியது எனக் கூறப்படுகிறது.