குடும்பத்தினருக்கு வேலை: இந்திய விமானப் போக்குவரத்து இயக்ககத்திற்குக் கண்டனம்

குடும்பத்தினருக்கு வேலை: இந்திய விமானப் போக்குவரத்து இயக்ககத்திற்குக் கண்டனம்

2 mins read
4a10fba2-af84-40d7-8de1-0f9703b9f7d2
டிஜிசிஏ அதிகாரிகள் தங்களது பதவி, செல்வாக்கைப் பயன்படுத்தி தங்கள் உறவினர்களுக்கு விமானத்துறை சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற உதவியுள்ளனர் என்பதே தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டாகும். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்திய விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்ககத்தில் (டிஜிசிஏ) பணியாற்றுவோரின் செயல்பாடுகளில் நலன்சார் முரண்பாடுகள் காணப்படுவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த ஆணையத்தை அமைச்சு கடுமையாகக் கண்டித்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

டிஜிசிஏ அதிகாரிகள் தங்களது பதவி, செல்வாக்கைப் பயன்படுத்தி தங்கள் உறவினர்களுக்கு விமானத்துறை சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற உதவியுள்ளனர் என்பதே தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டாகும்.

இதுபோன்ற தகவல்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டியது அவசியம் ஆகும். இல்லையெனில் நலன்சார் உடன்பாடுகளுக்கு வழிவகுக்கும்.

இந்நிலையில், அரசு ஆவணங்களின்படி, டிஜிசிஏ சேர்ந்த 51 அதிகாரிகள், தங்களது 59 உறவினர்கள் விமானப் போக்குவரத்துத் துறையில் பணியாற்றுவதைத் தெரிவித்திருப்பது பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டு 33 அதிகாரிகள் தங்களுடைய உறவினர்கள் 41 பேர் விமானத் துறையில் பணியாற்றுவதாகத் தெரிவித்திருந்தனர். அந்த உறவினர்களில் பலர் இண்டிகோ, ஏர் இந்தியா, ஆகாசா, ஏர்பஸ் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள், விமானப் பயிற்சிப் பள்ளிகள், விமான நிலையச் செயல்பாட்டு நிறுவனங்களில் பணியாற்றுவது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு உறவினர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்காமல் மறைப்பது கவலைக்குரியது என விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏனெனில் இத்தகைய செயல்பாடு அந்நிறுவனங்கள் மீதான தணிக்கை, கட்டுப்பாடுகளைத் தளர்த்த வழிவகுக்கும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னதாக, டிஜிசிஏ உதவி இயக்குநர் பொறுப்பில் இருந்த ஒருவரின் சகோதரி ஏர் இந்தியாவில் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவில் பணியில் இணைந்தார்.

இதுகுறித்து ஏன் தகவல் தெரிவிக்கவில்லை எனக் கேள்வி எழுந்தபோது அந்த சகோதரி தன்னைச் சார்ந்திருக்கவில்லை என உதவி இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.

டிஜிபிஏவும் இந்த விளக்கத்தை நியாயப்படுத்த முயன்றபோது விமானப் போக்குவரத்து அமைச்சு அதை நிராகரித்தது.

இதேபோல் மற்றொரு தருணத்தில், நலன்சார் முரண்பாடுகள் தொடர்பான புகார்களை அமைச்சுக்கு அனுப்பாமல் டிஜிசிஏ அமைப்புக்குள் விசாரணை நடத்தி தீர்வு காணலாம் என்று முன்வைக்கப்பட்ட யோசனையையும் நிராகரித்தது தற்போது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக டிஜிசிஏ முன்னாள் தலைவர் சையது அகமது கித்வாய் எழுதிய கடிதத்தை அமைச்சு நிராகரித்திருந்தது‌.

ஏற்கெனவே லஞ்சப்புகார் தொடர்பான சிபிஐ விசாரணை, ஊழியர் பற்றாக்குறை, அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாக அமைப்பின் தணிக்கை என டிஜிசிஏ பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.

இத்தகைய சூழலில், டிஜிசிஏ-வில் நலன்சார் முரண்பாடுகள் நிலவுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
விமானப் போக்குவரத்துவேலைகுடும்பம்பயிற்சிபள்ளி