கோலாலம்பூர்: இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள உம்ரோய் ராணுவத் தளத்தில் நடைபெற்ற ‘இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளர்ச்சி, மாற்றத்திற்கான வட்டார ராணுவங்களின் பங்காளித்துவம் (பிரகதி 2026) என்ற முதலாவது 13 நாள் பன்னாட்டுக் கூட்டு ராணுவப் பயிற்சி நிறைவுபெற்றது.
அந்தக் கூட்டுப் பயிற்சியில் மலேசியா, இந்தியா, பூட்டான், கம்போடியா, இந்தோனீசியா, லாவோஸ், மாலத்தீவு, மியன்மார், நேப்பாளம், பிலிப்பீன்ஸ், சீஷெல்ஸ், இலங்கை, வியட்னாம் ஆகிய 13 நாடுகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.
கடந்த மே 18ஆம் தேதிமுதல் மே 30ஆம் தேதிவரை ‘பிரகதி 2026’ பயிற்சி இடம்பெற்றதாக இந்தியத் தற்காப்பு அமைச்சு திங்கட்கிழமை (ஜூன் 1) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
பொதுவான பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்வதில் பங்கேற்கும் ஆயுதப் படைகளின் கூட்டுத்திறன், பரஸ்பர நம்பிக்கை, கூட்டு உறுதிப்பாடு ஆகியவற்றை அப்பயிற்சி வெளிப்படுத்தியது.
அந்த நிகழ்வில் ஆறு துணைத் தளபதிகளும் நாற்பதுக்கும் மேற்பட்ட மூத்த ராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
சமத்துவம், நட்பு, பரஸ்பர மரியாதையுடன் வட்டாரப் பங்காளிகள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் அந்நிகழ்வு ஒரு பொதுவான தளமாக அமைந்தது.
அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும் பாதியளவு மலைப்பாங்கான இடங்களிலும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதை மையமாகக் கொண்டு அப்பயிற்சி நடைபெற்றது.
விரிவுரைகள், செயல்முறைப் பயிற்சிகளுக்குப் பிறகு, வீரர்கள் 72 மணிநேரத் தகுதி மதிப்பீட்டுப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவேற்றினர்.
தொடர்புடைய செய்திகள்
சவாலான பயிற்சிச் சூழல்களிலும் வீரர்களிடையே நிலவிய நல்லிணக்கமும் பிணைப்பும் எதிர்காலத்தில் வட்டார அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளதாக இந்தியத் தற்காப்பு அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

