தண்ணீர்த் தொட்டியில் பத்திரிகையாளர் சடலம்

1 mins read
27f91d84-8581-4b8d-9db3-fdd866a2049b
என்டிடிவியின் செய்தியாளராக முகேஷ் சந்திரசேகர் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது. - கோப்புப் படம்: என்டிடிவி இணையம்

போபால்: சட்டீஸ்கரில் ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த பத்திரிகையாளர் ஒருவர், தண்ணீர்த் தொட்டியிலிருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

சட்டீஸ்கர் சாலைக் கட்டுமானத்தில் முறைகேடுகள் நடப்பது குறித்து அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் 28 வயது பத்திரிகையாளரான முகேஷ் சந்திரகர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அம்மாநிலத்தில் ரூ.120 கோடி மதிப்பிலான பஸ்தார் சாலைக் கட்டுமானத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகர் என்பவருடனான நேர்காணலில் பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர் சில நாள்களுக்கு முன்பு கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில், ஜனவரி முதல் தேதியன்று முகேஷை ஒப்பந்ததாரரான சுரேஷின் சகோதரர் ரித்தேஷ் தன்னைச் சந்திக்திக்க வருமாறு அழைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நீண்ட நேரமாகியும் முகேஷ் வீடு திரும்பவில்லை. அவரைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் முகேஷை வலைவீசித் தேடினர்.

சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த காவல்துறையினருக்கு, முகேஷ் கடைசியாக சென்ற இடம் சுரேஷின் குடியிருப்புப் பகுதி என்பது தெரியவந்தது.

அந்த இடத்தில் சோதனை மேற்கொண்டதில் ஒரு தண்ணீர்த் தொட்டியில் முகேஷ் சடலமாக கிடப்பது தெரிய வந்தது. அவரது உடலை மீட்ட காவல்துறையினர், உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவத்தில் சுரேஷின் சகோதரரை மட்டும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரது குடும்பத்தினர் தலைமறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்