இம்பால்: இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதம் ஏந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் செய்தியாளர் ஒருவர் காயமுற்றார்.
அந்தக் காணொளிச் செய்தியாளரின் (video journalist) இடது தொடையில் தோட்டாக் காயங்கள் ஏற்பட்டதாக இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மணிப்பூரின் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் உள்ள தாம்னொக்பி கிராமத்தில் பயங்கரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் அந்தச் செய்தியாளர் காயமுற்றார் என்று காவல்துறை தெரிவித்தது.
தாம்னொக்பி, சனசபி பகுதிகளில் நிகழ்ந்துள்ள இந்த ஆக அண்மைய தாக்குதலுக்கு எதிராக மணிப்பூர் முதலமைச்சர் என். பிரேன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காயமுற்ற செய்தியாளர், இம்பேக்ட் டிவி (Impact TV) எனும் தனியார் தொலைக்காட்சி ஒளிவழிக்கு வேலை செய்யும் எல். கபிசந்திரா எனும் ஆடவர் ஆவார். காயமடைந்தவுடன் அவர் இம்பாலில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு விரைந்து கொண்டு செல்லப்பட்டார்.
தோட்டா அவரின் இடது தொடையைத் துளைத்ததையும் அதன் காரணமாக அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதையும் அந்த மருத்துவமனை உறுதிப்படுத்தியது என்று பெயர் வெளியிட விரும்பாத பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.