தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீதிபதிகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம்

1 mins read
a6d5862a-3a9d-45ef-bed9-0e899738d50a
நீதிபதிகள் துறவு வாழ்க்கை வாழ்ந்து, குதிரையைப்போல் வேலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. - கோப்புப் படம்: இணையம்

புதுடெல்லி: சமூக ஊடகங்கள் திறந்த தளங்கள் என்பதால் அவற்றைப் பயன்படுத்துவதில் இருந்து நீதிபதிகள் விலகி இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் அதிதி குமாா் சா்மா, சரிதா சௌதரி ஆகிய இரு பெண் நீதிபதிகள், தங்களின் பயிற்சிக் காலத்தின்போது சரிவர செயல்படாததால் இருவரும் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்.

அதனை உறுதிப்படுத்திய உயா் நீதிமன்றத்தின் உத்தரவு தொடா்பான வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வருகிறது.

அந்த அமர்வு வியாழக்கிழமை (டிசம்பர் 12) கூறுகையில், “நீதித்துறை அதிகாரிகள் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தக்கூடாது. அவர்கள் தீர்ப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது.

“ஏனெனில் நாளை, தீர்ப்பை மேற்கோள் காட்டினால், நீதிபதி ஏற்கெனவே வெளிப்படுத்திய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தும். ஃபேஸ்புக் என்பது ஒரு திறந்த தளம்.

“நீதிபதிகள் துறவு வாழ்க்கை வாழ்ந்து, குதிரையைப்போல் வேலை செய்ய வேண்டும். சமூக ஊடங்களில் தீா்ப்புகள் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கக்கூடாது,” என்று நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

சா்ச்சையில் சிக்கிய பெண் நீதிபதி, தமது ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டதாக மூத்த வழக்கறிஞா் கௌரவ் அகா்வால், உச்ச நீதிமன்றத்தில் அளித்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதனைத் தொடர்ந்து, நீதிபதிகளின் சமூக ஊடகப் பயன்பாடு குறித்து உச்ச நீதிமன்ற அமர்வு, நீதிபதிகள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து அறிவுறுத்தியது.

நீதித் துறையில் ஆடம்பரத்துக்கு இடமில்லை என்றும் அது தெளிவுபடுத்தியது.

குறிப்புச் சொற்கள்