புதுடெல்லி: அரசாங்கம் தம் கடமையைச் செய்யவில்லை எனில் அதில் தலையிட நீதித்துறைக்கு எல்லா உரிமைகளும் உண்டு என்று மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
அண்மையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து இந்தியத் துணை அதிபர் ஜக்தீப் தன்கர் விமர்சித்திருந்த நிலையில், கபில் சிபல் அதற்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பத்து மசோதாக்கள் குறித்து எந்த முடிவும் எடுக்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பல மாதங்களாகக் கிடப்பில் போட்டுவிட்டார்.
அதனை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது.
அதில், ஆளுநரைக் கடுமையாகச் சாடிய உச்ச நீதிமன்றம், காலந்தாழ்த்தியதால் அவை சட்டமானதாகக் கருதப்படும் எனத் தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து, அவை சட்டமானதாக அறிவித்து, தமிழக அரசும் அரசிதழில் வெளியிட்டது.
அவ்வழக்கின்போது, ஆளுநர்களால் பரிந்துரைக்கப்பட்ட மசோதாக்கள் குறித்து மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று அதிபருக்கும் உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்தது.
அதனையடுத்து, அதிபருக்கே உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பது அணு ஏவுகணைத் தாக்குதல் போன்றது என்றும் நீதித்துறை ‘சூப்பர்’ நாடாளுமன்றம் போலச் செயல்படுகிறது என்றும் திரு தன்கர் சாடியிருந்தார்.
இந்நிலையில், 1975ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பைத் திரு சிபல் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என்று நீதிபதி அறிவித்ததைத் திரு சிபல் சுட்டிக்காட்டினார்.
“அப்போது ஒரு நீதிபதி அறிவித்ததைத் திரு தன்கர் ஏற்றுக்கொண்டார். இப்போது, இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, அரசாங்கத்திற்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியிருப்பதை எதிர்த்து அவர் கேள்வி கேட்கிறார்,” என்றார் திரு சிபல்.
திரு தன்கரின் கருத்தால் தாம் வருத்தமடைவதாகக் கூறிய திரு சிபல், “நாட்டு மக்கள் நம்பிக்கையைப் பெற்ற ஒரே நிறுவனம் என்றால் அது நீதித்துறைதான். அதிபர் என்பவர் பெயரளவிற்கு மட்டுமே தலைவர். அமைச்சரவையின் ஆலோசனைப்படியே அவரால் இயங்க முடியும். அதிபருக்குத் தனிப்பட்ட உரிமை என்று எதுவும் இல்லை. தன்கர் இதை அறிந்திருக்க வேண்டும்,” என்றும் சொன்னார்.
மேலும், நாடாளுமன்றம் நிறைவேற்றும் மசோதாவை அதிபர் காலவரம்பின்றித் தாமதப்படுத்த முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
“நாடாளுமன்ற மாநிலங்களவைத் தலைவர் கட்சி சார்பற்றவராக இருக்க வேண்டும். அவர் ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருக்கக்கூடாது,” என்றும் திரு சிபல் வலியுறுத்தியுள்ளார்.
“உச்ச நீதிமன்றத்திற்கு 142வது சட்டப் பிரிவு சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது. அதனை அரசியலமைப்புதான் வழங்குகிறதே ஒழிய, அரசாங்கமன்று. அணு ஏவுகணை என்றால் அது பண மதிப்பிழப்பு நடவடிக்கைதான். அப்போது யாருமே பாதிக்கப்படவில்லையா?” என்றும் அவர் கூறினார்.