பாட்னா: இந்தியக் குற்றவியல் நீதித்துறை நடைமுறையானது நெடுங்காலமாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரையே முதன்மையாகக் கொண்டு இயங்கி வருவதாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கவலை தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலச் சட்டச் சேவைகள் ஆணைய வளாகத்தில் பாதிக்கப்பட்டோர் உரிமைகள் மையத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றியபோது தலைமை நீதிபதி சூர்ய காந்த் இக்கருத்தைக் கூறினார்.
குற்றவியல் விசாரணைகளில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தமது வாக்குமூலத்தைப் பதிவு செய்த பிறகு, சாட்சியமளிக்கும் நாள் வரை இந்நீதிமன்ற நடைமுறையிலிருந்து முற்றிலும் விடுபடுவதற்கான சூழல் நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இடைப்பட்ட காலத்தில் அவர்களுக்கு என்ன நிகழ்கிறது என்பதில் எவருக்கும் நேரடிப் பொறுப்பின்றி இருப்பது அவர்களுக்குப் பெரும் வேதனையான அனுபவத்தைத் தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய சூழலில் பாதிக்கப்பட்டவர்களின் நலன்களை உறுதிசெய்வது மிகவும் அவசியமாகிறது.
இந்தச் சூழலை மாற்றும் நோக்கில், பலநோக்கு வாகனச் சேவை உள்ளிட்ட மேலும் மூன்று முக்கிய வசதிகளையும் தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார்.
பாதிக்கப்பட்டோர் உரிமைகள் மையமானது இழப்பீட்டுத் திட்டங்கள், சட்ட மற்றும் மருத்துவ உதவிகள், ஆலோசனைகள் ஆகியவற்றை ஒரே தளத்தின்கீழ் ஒருங்கிணைத்து வழங்குகிறது.
நீதிமன்றங்களை நேரடியாக அணுக முடியாத கிராமப்புறக் குடியிருப்புகளுக்குச் சென்று சட்ட விழிப்புணர்வு, ஆரம்பக்கட்ட உதவிகளை வழங்க பலநோக்கு வாகனச் சேவை பயன்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.
“நீதியைத் தேடிப் பொதுமக்கள் காத்திருக்கக் கூடாது; நீதியே மக்களைத் தேடிச் செல்ல வேண்டும்,” என்றும் திரு சூர்ய காந்த் தெளிவாகத் தெரிவித்தார்.
குற்றவியல் நீதித்துறை முறையில் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஒரே இடத்தில் கிடைக்கச் செய்வது இத்திட்டங்களின் முதன்மை நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நீதிமன்றக் கதவுகளைத் தேடி வருவோருக்கு மட்டுமன்றி, உதவி தேவைப்படும் அனைவருக்கும் முறையான நீதி கிடைக்கச் செய்வதன் மூலமே முழுமையான நீதியை உறுதிசெய்ய முடியும் என்று விழாவில் சுட்டிக்காட்டப்பட்டது.
பாதிக்கப்பட்ட நபர் சட்ட உதவிகளை அச்சமின்றிப் பெறுவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
