கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் அம்மாநிலத்தின் கலாசாரம் பாதிக்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிரசாரம் மேற்கொண்டுள்ள அவர், பாஜக ஆட்சியில் மீன் உணவுக்குத் தடை விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.
பாஜகவினர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு மேற்கு வங்க மீன் உணவு கலாசாரம் குறித்து எதுவும் தெரியாது என்றும் முதல்வர் மம்தா கூறினார்.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இம்முறை, மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், பாஜகவை வீழ்த்த ‘மீன் அரசியலை’க் கையில் எடுத்துள்ளார் முதல்வர் மம்தா.
‘மீன் மற்றும் சாதம்’ என்பது மேற்கு வங்க மக்களின் உணவுப்பழக்கமாக மட்டுமல்லாமல், அவர்களின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. அங்கு பெரும்பாலானோர் மீன் உணவு சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள்.
இந்நிலையில், மம்தாவின் பிரசாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்க பாஜகவும் வியூகம் வகுத்திருப்பது பிரசாரக்களத்தில் மோதலை மீறிய சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்க மக்களிடம் சைவ உணவைத் திணிக்க முயலும் என்கிறார் மம்தா.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து, பாஜக வேட்பாளர்கள் மீன் உணவைச் சாப்பிடும் காணொளிகளைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
பிதான் நகர் தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் சரத்வத் முகோபாத்யாய், கட்லா வகை மீனை கையில் ஏந்தியபடி வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கிறார்.
அப்போது, பாஜக ஒருபோதும் மீன் அல்லது இறைச்சிக்குத் தடை விதிக்காது என்றும் அவர் உறுதியளித்து வருகிறார்.

