இந்திய ஜனநாயகம் கொடூரமாக நசுக்கப்பட்டதை ஜூன் 25 நினைவூட்டுகிறது: மோடி

இந்திய ஜனநாயகம் கொடூரமாக நசுக்கப்பட்டதை ஜூன் 25 நினைவூட்டுகிறது: மோடி

2 mins read
0b2e4a99-3c89-4d0b-af06-993624e3cb30
சுதந்திரத்தின் மூலமே மிக உயர்ந்த நிலையை எட்ட முடியும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட ஜூன் 25ஆம் தேதி, ஜனநாயகம் கொடூரமாக நசுக்கப்பட்ட இருண்ட காலத்தை நினைவூட்டுவதாக அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இந்தியாவில் அவசரநிலையைப் பிறப்பித்தார். அரசியலமைப்பு, படுகொலை செய்யப்பட்ட நாளாக அது அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து இந்தியப் பிரதமர் மோடி சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.

“அரசியலமைப்புப் படுகொலை தினம் என்பது இந்திய ஜனநாயகம் கொடூரமாக நசுக்கப்பட்ட இருண்ட காலத்தை நமக்கு நினைவூட்டுகிறது. ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம், குடிமக்களின் உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் எப்போதும் உறுதியுடன் இருக்க இது நம்மைத் தூண்டுகிறது,” என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அவசரநிலையை எதிர்த்த அனைத்துச் சான்றோருக்கும் தமது மரியாதைக்குரிய வணக்கத்தையும் திரு மோடி தெரிவித்துக்கொண்டார்.

சுதந்திரத்தின் மூலமே மகிழ்ச்சி கிடைக்கிறது, உன்னத நிலையை அடைவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது, மனநிறைவு கிடைக்கிறது என்று அவர் தெரிவித்தார். மேலும் அதன் மூலமே மிக உயர்ந்த நிலையை எட்ட முடியும் என்றும் திரு மோடி குறிப்பிட்டார்.

அரசியலமைப்புப் படுகொலை தினத்தை முன்னிட்டு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எக்ஸ் தளத்தில் கருத்துகளைப் பதிவிட்டிருந்தார்.

“1975, ஜூன் 25 என்பது இந்திய ஜனநாயக வரலாற்றில் ஓர் இருண்ட அத்தியாயம். அப்போது இந்திரா காந்தியும் காங்கிரஸ் கட்சியினரும் அதிகாரத் திமிருடன் அரசியலமைப்புச் சட்டத்தின் ஆன்மா, பத்திரிகை சுதந்திரம், கருத்துரிமை ஆகியவற்றை நசுக்க முயன்றனர்,” என்றார் அவர்.

அரசியலமைப்புப் படுகொலை நாளன்று நாட்டின் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதற்காக அவசரநிலைக்கு எதிராகப் போராடிய அனைவருக்கும் மரியாதைக்குரிய வணக்கத்தைச் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இதனை முன்னிட்டுச் சமூக ஊடகத்தில் கருத்தை வெளியிட்டிருந்தார்.

ஜனநாயகம், குடிமக்களின் உரிமைகள், அரசியலமைப்பு விழுமியங்கள் மீதான கடப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த நாள் அமைவதாக அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்