அனைவருக்கும் எளிதான முறையில் நீதி கிடைக்க வேண்டும்: மோடி வலியுறுத்து

2 mins read
903b2f3a-e07e-46c5-b957-fee21536a3cb
பிரதமர் மோடி. - படம்: ஊடகம்

புதுடெல்லி: நாட்டு மக்கள் அனைவருக்கும் எளிதான முறையில் நீதி கிடைக்க வேண்டும் என்றும் அதற்கான நடைமுறைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு இது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பீகாரில் நடைபெற உள்ள இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான இறுதிப் பிரசாரத்தின்போது அவர் குறிப்பிட்டார்.

சட்ட உதவி வழங்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, வலுப்படுத்துவது தொடர்பான மாநாடு, உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது.

சனிக்கிழமை (நவம்பர் 8) இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி,

தாம் முன்பே கூறியதுபோல், வணிகம் செய்வதும் வாழ்க்கை முறையை எளிதாக்குவதும்தான் அரசாங்கத்தின் இலக்கை அடைவதை சாத்தியமாக்கும் என்றார்.

“நீதியை மேலும் எளிதாக்கும் பொருட்டு, கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது மேலும் விரைவுபடுத்தப்படும்.

“ஏழைகள், தலித்துகள், ஒடுக்கப்பட்டவர்கள், பொருளியலில் பின்தங்கியவர்களுக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்துள்ளதுடன், இதையே இலக்காகவும் கொண்டுள்ளது,” என்றார் பிரதமர் மோடி.

நாடு முழுவதும் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பின் கீழ், எட்டு லட்சம் குற்ற வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மூன்று ஆண்டுகளுக்குள் இதைச் சாதித்துள்ளதாகக் கூறினார்.

தொழில்நுட்பம் என்பது ஒருவகையில் சீர்குலைக்கும் சக்தியாக மாறுவது என்பது தவிர்க்க இயலாத ஒன்று என்றும் எனினும் அதை ஜனநாயகத்துக்கான கருவியாக மாற்ற முடியும் என்றும் திரு மோடி தெரிவித்தார்.

ஏழைகள் தங்களுக்குள்ள உரிமைகள் குறித்து அறிந்துகொள்வது அவசியம் என்று குறிப்பிட்ட அவர், இல்லையெனில் அவர்களால் உரிய நீதியைப் பெற இயலாது போய்விடும் என்றார்.

அதனால்தான் ஏழைகள், பெண்கள், முதியவர்கள் மத்தியில் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இந்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது என்றும் திரு மோடி சுட்டிக்காட்டினார்.

முன்னதாகப் பேசிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய், நீதியின் வெளிச்சம் இந்தியாவின் கடைக்கோடி மனிதரையும் சென்றடைய வேண்டும் என வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்