புதுடெல்லி: இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை இந்திய ஆளுநர் மாளிகை வெளியிட்டது.
இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேவால் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டார்.
“இந்திய அரசியலமைப்பு வழங்கிய அதிகாரத்தின்படி, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்யகாந்த்தை நியமித்து அதிபர் திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று தமது பதிவில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உள்ள பி.ஆர்.கவாய் எதிர்வரும் 24ஆம் தேதி ஓய்வு பெறுகிறார்.
இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கின. அப்போதே தலைமை நீதிபதியாக சூர்யகாந்த்தை நியமிக்க பி.ஆர்.கவாய் பரிந்துரை செய்திருப்பதாகத் தகவல் வெளியானது.
உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான சூர்யகாந்த், கடந்த 1962ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி ஹரியானா மாநிலம், ஹிசார் நகரில் பிறந்தவர். 1981ஆம் ஆண்டு பட்ட மேற்படிப்பு முடித்த அவர், 1985ல் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றினார்.
2000ஆம் ஆண்டு ஹரியானாவின் தலைமை அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட அவர், பின்னர் 2004ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
கடந்த 2018ல் இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய திரு சூர்யகாந்த், 2019ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி நியமனம் செய்யப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அடுத்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்க உள்ள அவர், 2027ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி வரை அப்பதவியில் நீடிப்பார்.

