புதுடெல்லி: ஊழல் வழக்கிலிருந்து தாம் விடுவிக்கப்பட்டதன் மூலம் நீதி வென்றது, சதி முறியடிக்கப்பட்டது என்று டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
நீண்ட நாள்களாக நடைபெற்று வந்த மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கிலிருந்து முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா ஆகியோரை டெல்லி சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) விடுவித்தது.
அந்த இருவருடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த மேலும் 21 பேரையும் நீதிமன்றம் விடுவித்தது.
இந்த வழக்கில் தவறான விசாரணையை மேற்கொண்டதாக சிபிஐக்குக் கண்டனம் தெரிவித்த சிறப்பு நீதிமன்றம், மதுபானக் கொள்கையில் சதி நடந்திருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றது.
மதுபானக் கொள்கையில் முறைகேடு என்ற குற்றச்சாட்டுக்கு முகாந்திரமே இல்லை என்றும் ஊகத்தின் அடிப்படையில் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது என்றும் நீதிபதி ஜிதேந்தர் சிங் தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
தீர்ப்பைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கெஜ்ரிவால் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். தான் நிரபராதி என்பதற்கு இதுவே சாட்சி என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார்.
நேர்மை, கடின உழைப்பின் மூலமும் தான் மக்களின் நம்பிக்கையை சம்பாதித்ததாகவும் அதற்குக் கிடைத்த வெற்றிதான் இது என்றும் குறிப்பிட்ட கெஜ்ரிவால், மாநில ஆட்சிகளைக் கவிழ்க்காமல் மக்களுக்கு சேவை செய்யுமாறு பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த 2021ஆம் ஆண்டு, கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது டெல்லியில் புதிய மதுபானக் கொள்கையை ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்தது.
தொடர்புடைய செய்திகள்
அதற்கு முன்பு அரசே மதுபானங்களை விற்று வந்த நிலையில், அதை மாற்றி தனியாருக்கு அனுமதி கொடுத்து, அதற்குத் தனியாக உரிமக் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
ஆனால், இதில் ஊழல் நடந்ததாகப் புகார்கள் எழுந்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

